1

சுமத்ரா அருகே மையம் கொண்ட நிலநடுக்கம் உலகையே உலுக்கியிருக்கிறது.

26 டிசம்பர் 2004, கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் பல நாடுகளில் பாக்சிங் டே (Boxing Day) என்று கொண்டாடப்படுகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற கிறித்துவ காமன்வெல்த் நாடுகளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். கிறிஸ்மஸ் அன்று தமக்குள்ளாக பரிசுப் பொருட்களைக் கொடுத்துக் கொண்டாடும் பணக்காரர்கள், கிறிஸ்மஸ் பண்டிகை மறுநாள் தம் கீழே வேலை பார்க்கும் ஏழைகளுக்கு பெட்டிகளில் தானம் தருவதையும், அந்தப் பெட்டிகளைப் (box) பெறுவோர் அந்தப் பெட்டிகளை ஆவலோடு பிரிப்பதுமே boxing day என்னும் பெயர் வர முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது.

பணக்காரர்கள், அவர்களிடம் ஊழியம் செய்யும் வேலைக்காரர்கள் என்ற பாகுபாடு இந்த நாடுகளில் கிட்டத்தட்ட காணாமல் போனாலும், இந்த ‘பாக்சிங் டே’ எனும் பெயர் மட்டும் தங்கி விட்டது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 26-30 டிசம்பர் தேதிகளில் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறுவது வாடிக்கை.

ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இம்முறை ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை எதிர்த்து தொடரின் இரண்டாவது டெஸ்டில் விளையாடியது. நியூசிலாந்து-இலங்கை இரண்டும் முதலாவது ஒருநாள் போட்டியில் மோதின.

இந்த இரண்டு ஆட்டங்களும் தொடங்கி ஒரு மணிநேரத்துக்குப் பிறகுதான் சுமத்ராவுக்கு அருகே கடலில் நிலநடுக்கம். அப்பொழுது இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு தம் நாடு பேரழிவில் மாட்டிக்கொள்ளப்போகிறது என்று தெரியாது. அன்று நடந்த ஆட்டத்தில் இலங்கை மிகக்குறைந்த ரன்களுக்கு அவுட்டாகி விட, தொடர்ந்து விளையாடிய வெகு எளிதாக ஆட்டத்தை வென்றது.

மறுநாள் நிலநடுக்க விபரீதத்தின் வீச்சு இலங்கை ஆட்டக்காரர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. ஜெயசூரியா, அட்டபட்டு இருவரின் பெற்றோர்களுக்கும் ஆபத்து இருக்கலாம் என்று செய்திகள் வந்தன. ஜெயசூரியாவின் தாயார் மாதர – கடற்கரை நகரம் – எனுமிடத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் காயம் பட்டார். ஆனால் தப்பித்துவிட்டார். அட்டபட்டுவின் தந்தை வெளியூருக்குப் பயணம் செய்தவர் பத்திரமாக இருக்கிறார் என்றும் பின்னர் தகவல் கிடைத்தது. கால் கோட்டைக்கருகே உள்ள கிரிக்கெட் மைதானம் கடலலைகளால் சூறையாடப்பட்டு குப்பைக்காடாகக் காட்சியளித்தது.

இலங்கையில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான் தெய்வாதீனமாகத் தப்பியதாகக் குறிப்பிட்டார். கால் நகரிலிருந்த முரளி அங்கிருந்து கிளம்பிய 20 நிமிடங்களுக்குள்ளாக கடலலை ஊருக்குள் நாசத்தை விளைவித்தது.

இலங்கை ஆட்டக்காரர்கள் உடனடியாக நாடு திரும்ப விரும்பினர். ஆனால் பாதியில் ஒரு போட்டித்தொடரை முறித்துக்கொண்டு வந்தால் ஐசிசி அபராதம் விதிக்கும் என்று இலங்கை கிரிக்கெட் நம்பி, அதனால் பயந்து தமது கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து விளையாடுமாறு வற்புறுத்தியது. ஆனால் மறுநாளே ஐசிசி, இரண்டு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டால், தொடரை ரத்து செய்து, வேறு சமயத்துக்கு மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்க, நியூசிலாந்தின் ஒப்புதலோடு இலங்கை வீரர்கள் நாடு திரும்புகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சேதம் மிக மோசமானது. அந்நாட்டிற்கு பேருதவி வெளியிலிருந்து தேவைப்படுகிறது. இதற்கிடையே இலங்கை அரசு சரியான முறையில் வட கிழக்கு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்வதில்லை என்ற சச்சரவு ஏற்பட்டிருக்கிறது.

மெல்போர்னில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்ந்து நடைபெற்றது. இரு நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடினாலும், இரண்டாம் இன்னிங்ஸில் உதிர்ந்து போக, ஆஸ்திரேலியாவுக்கு மற்றுமொரு எளிதான வெற்றி. ஆஸ்திரேலிய வீரர்கள் தமது பரிசுப் பணத்தை சுனாமி உதவி நிதிக்கு வழங்கியுள்ளனர்.

பாக்சிங் டே – சுனாமி நாள் அன்று மற்றும் இரண்டு கிரிக்கெட் ஆட்டங்கள் நிகழ்ந்தன. இந்தியா-பங்களாதேஷ் இரண்டாம் ஒருநாள் போட்டி. இந்தியாவில் ஏற்பட்ட சேதத்தின் மொத்த அளவு ஞாயிறு அன்று யாருக்கும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் ஒருவேளை ஆட்டத்தை நிறுத்தியிருப்பார்களா? பங்களாதேஷிலும் அதிகமாக எந்த சேதமும் நடக்கவில்லை. உலகுக்கே மோசமான ஒரு நாளாக இருந்தாலும் பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு இந்த நாள் முக்கியமான நாள். அன்று பங்களாதேஷ் இந்தியாவைத் தோற்கடித்து, சொந்த மண்ணில் முதல் முதலாக ஓர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வென்றது. மறுநாளே நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்று போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டித்தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தது.

தென்னாப்பிரிக்கா-இங்கிலாந்து இரண்டும் பாக்சிங் டே அன்று டர்பன் நகரில் இரண்டாம் டெஸ்டை விளையாட ஆரம்பித்தன. இங்கிலாந்து மிக எளிதாக முதல் டெஸ்டை ஜெயித்திருந்தது. ஆனால் இரண்டாம் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் மிகச்சிறு ஸ்கோருக்கே அவுட்டானது. தொடன்ர்து தென்னாப்பிரிக்காவும் நிறைய ரன்களைப் பெற்று நல்ல லீட் எடுத்திருந்தது. ஆனால் இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அபாரமாக விளையாடியது. டிரெஸ்கோதிக், ஸ்டிரவுஸ், தார்ப் ஆகியோர் சதமடிக்க, தென்னாப்பிரிக்கா தோற்கும் அபாயம் இருந்தது. ஆனால் இன்று கடைசி நாளில் தென்னாப்பிரிக்கா வெளிச்சமின்மையின் துணையுடன் ஆட்டத்தை டிரா செய்தது. இங்கிலாந்து அணியினரும் தம் வருமானத்தை சுனாமி நிவாரணத்துக்கென தந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவர் கிளைவ் லாய்ட், ஐசிசி உடனடியாக இலங்கைக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ஐசிசியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

ஐசிசி கையில் ஏகப்பட்ட பணம் இருக்கிறது. அதன் ஒரு சந்தையான இலங்கை இன்று பெரும் திண்டாட்டத்தில் இருக்கிறது. ஐசிசியால் தாராளமாக பத்து மில்லியன் டாலர் உதவியை இலங்கைக்குக் கொடுக்க முடியும். ஆனால் தனக்கும் உலகில் நடக்கும் ஒரு பெரும் அழிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைப்போல ஐசிசி வாய்பொத்தி நிற்கிறது. தனித்தனியாக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வருமானத்தைக் கொடுக்கும்போது பணத்தில் கொழிக்கும் ஐசிசியின் செய்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

மற்ற அணி வீரர்கள் தத்தம் விளையாட்டுகளுக்குப் போய்விடுவார்கள். இலங்கை அணி வீரர்களுக்கு நீண்ட மீட்புப்பணி காத்திருக்கிறது.

License

Share This Book