8

மெக்ராத் பேட்டிங்கில் ஜீரோ!

Glen Mcgrath

 

‘புறா’ என்று செல்லப்பெயருடன் அழைக்கப்படும் கிளென் மெக்ராத் ஆஸ்திரேலியாவின் சூப்பர் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர். இப்பொழுது நாக்பூரில் நடக்கும் டெஸ்ட் இவரது 100வது டெஸ்ட். மெக்ராத்தை விட அதிகம் டெஸ்ட் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்கள் நான்கு பேர்தான் – இயான் போதம், வாசிம் அக்ரம், கபில் தேவ், கோர்ட்னி வால்ஷ். இந்த நான்கு பேரில் வால்ஷ் ஒருவர்தான் மெக்ராத்தை விட (இப்பொழுதைக்கு) அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளவர். இந்த நால்வரில் வாசிம் அக்ரம் ஒருவர்தான் மெக்ராத்தை விட மட்டையாளர்களை அதிகம் பயமுறுத்தக்கூடியவர் என்று சொல்லலாம். இந்த ஐவரிலுமே மெக்ராத்தான் தான் வீசிய ஓவர்களில் மிகக்குறைந்த ரன்களைக் கொடுத்தவர்.

சற்று முந்தைய தலைமுறையில் வளர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அத்தனைபேரும் பந்துவீச்சில் வேகம் இருக்கவேண்டும் என்றுமட்டும்தான் நினைத்தார்கள். விவேகம் குறைவுதான். ஆனால் மெக்ராத் வித்தியாசமானவர். குறிப்பிட்ட ஓரிடத்தில் – ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே – தொடர்ச்சியாக சரியான அளவில் தொடர்ந்து வீசிக்கொண்டே இருப்பது. அதையே மீண்டும் மீண்டும் செய்வது. இதுதான் மெக்ராத்தின் பாணி. அப்படி வீசும் பந்துகளில் ரன்கள் அடிப்பது கடினம். ரன்கள் அடிக்க பிரயத்னம் செய்வதில் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆகத்தான் சாத்தியங்கள் அதிகம். அல்லது எல்.பி.டபிள்யூ ஆகவேண்டியிருக்கும்.

மெக்ராத் பந்துவீசும் முறை பாடப்புத்தகங்களில் அப்படியே சொல்லப்பட்டிருப்பது. கிட்டத்தட்ட 25-30 மீட்டர் தூரம் ஓடிவருவார். ஸ்டம்பிற்கு வெகு அருகாமையிலிருந்து, வீசும் கை விக்கெட்டின் மேல் வர வீசுவார். கடைசி விநாடியில் சற்றே விலகி கிட்டத்தட்ட நடுவருக்கு/ஸ்டம்பிற்கு நேர் முன்னால் வீசும் கை இருக்குமாறு பந்தை வீசுவார். இதனால் மெக்ராத் பந்துவீசும்போது மட்டையாளருக்கு நேர் எதிராக – ஒரே நேர்க்கோட்டில் இருப்பார். இம்மாதிரியான ஓடுபாதை அவ்வளவு சுலபமாக எல்லொருக்கும் வாய்ப்பதில்லை. இப்பொழுது பந்து வீசுபவர்களிலேயே தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் ஒருவர்தான் அப்படி வீசுபவர். முந்தைய வலதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ இதேபோன்று வீசுபவர். இவர்கள் மூவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பந்துவீச்சாலர்கள் என்று சொல்லலாம். அதிவேகப் பந்து வீசுவதில் இவர்களுக்கு நாட்டமில்லை. அதற்குத்தான் ஷோயப் அக்தர், பிரெட் லீ போன்றவர்கள் இருக்கிறார்களே!

இவர்களது சாரமே துல்லியம், அவ்வப்போது சிறிதாக பந்தின் திசையை நகர்த்துதல், முடிந்தவரை – ஓவருக்கு ஆறு பந்துகளையுமே – ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசுதல், ஆனால் மிக அதிக அகலம் கொடுக்காமல் வீசுதல் ஆகியவையே. ஹாட்லீ, பொல்லாக் இருவருக்கும் வாய்த்த ஸ்விங் கூட மெக்ராத்துக்குக் கிடையாது. மெக்ராத், முடிந்தவரை, பந்தின் தையல் குறிப்பிட்ட கோணத்தில் சுழன்று கொண்டே வந்து தரையில் படுவதன் மூலம் பந்து பக்கவாட்டில் நகர்வதைத்தான் (seam movement) அதிகம் நம்பி வருகிறார். அதை மட்டும் வைத்துகொண்டே, தன் விடாமுயற்சியால், மட்டுமே இதுவரை (வியாழன் இரவு வரை) 449 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார்.

மெக்ராத் இடதுகை மட்டையாளர்களுக்கு மிகவும் நன்றாகப் பந்து வீசுவார் என்று பெயர் பெற்றவர். பிரையன் லாராவை மிகுந்த கஷ்டத்துக்குள்ளாக்கியவர். இடதுகை மட்டையாளர்களுக்கு வீசும் கை விக்கெட்டை விட்டு விலகிவர வீசுவார். அப்படி வீசும்போது பந்தை உள்நோக்கிக் கொண்டுவந்து, மட்டையாளர் வெட்டி ஆடத்தேவையான அகலம் கொடுக்காமலேயே வீசுவார். லாரா போன்ற ஆட்டக்காரர்களை இந்த நீளமும், திசையும் வெகுவாக பாதித்தது.

பொல்லாக், ஹாட்லீ போலல்லாது, மெக்ராத் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுபவர். தன் எதிராளி தன் பந்தை அடித்து விட்டால் வாய் ஓயாது அவரிடம் சென்று ‘பேசுவார்’. எந்நிலையும் மனம் தளராத போட்டியாளர். டெண்டுல்கர், லாரா போன்ற பெயர் பெற்ற மட்டையாளர்களுக்கும், மெக்ராத்துக்கும் நடந்த போட்டிகளில் மெக்ராத்தே மேலே வந்துள்ளார்.

இத்தனை திறமை வாய்ந்த மெக்ராத் பேட்டிங்கில் ஜீரோ! தன் 100 டெஸ்ட் ஆட்டங்களில் இவர் மொத்தமாக இதுவரை எடுத்துள்ள ரன்கள் வெறும் 468! கிட்டத்தட்ட அத்தனை விக்கெட்டுகள் இவர் கையில் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! மெக்ராத் பேட்டிங் செய்ய வந்துள்ளார் என்றாலே விக்கெட் விழுந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்ப்பர். அவ்வப்போது பந்தைத் தூக்கியடித்து ரன்களைப் பெற்றாலும், மெக்ராத்தை விட மோசமான பேட்ஸ்மேன் இன்றைய கிரிக்கெட் உலகில் எந்த சர்வதேச அணியிலும் கிடையாது.

மெக்ராத்தின் ஃபிட்னெஸ் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக மாறிமாறி ஆட்டத்திலிருந்து ஓய்வெடுக்கும் நிலையில், மெக்ராத் இதுவரை இரண்டே இரண்டு முறைகள் – அதுவும் ஒன்பது டெஸ்ட்கள்தான் – தன் அணிக்காக விளையாடாமல் இருந்துள்ளார். இன்றும் கூட நாள் முழுவதும் பந்து வீசுகிறார் ஆனால் கையையும், காலையும் இழுத்துக்கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து கொள்வதில்லை.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை டென்னிஸ் லில்லீதான் அவர்களது தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர். அதற்குப்பின் மெக்ராத் பெயர்தான் முன்னால் வரும்.

License

Share This Book