21

இந்தியாவின் மிக நம்பகமான பேட்ஸ்மேன் ராஹுல் திராவிட். பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC) ரேட்டிங் படி டெஸ்டு போட்டிகளில் உலகின் ‘நம்பர் ஒன்’னாகவும், ஒருநாள் போட்டிகளில் ஏழாவதாகவும் இருப்பவர். இந்திய அணி நிர்வாகம் ஒருநாள் போட்டிகளில் சரியான கலவை இருக்க வேண்டுமென்பதற்காக திராவிடை அவரது விருப்பத்திற்கு மாறாக விக்கெட் கீப்பிங் செய்யத் தூண்டிக்கொண்டிருக்கிறது. திராவிட் ஒரு சிறந்த டீம் பிளேயர் என்பதனால் விருப்பமில்லாவிட்டாலும் அணி நிர்வாகம் வேண்டும் போதெல்லாம் கீப்பிங் செய்கிறார்.

அவர் எப்படி கீப்பிங் செய்ய வந்தார் என்பதை நாம் சிறிது கவனிக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளுக்கு திராவிட் சிறிதும் லாயக்கற்றவர் என்ற எண்ணம் அப்பொழுது இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து வந்தது. அதற்கு இடமளிக்கும் வகையில் திராவிட் தன் ஆரம்ப நாள்களில் ஒருநாள் போட்டிகளில் மிக மெதுவாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டத்தை சுழற்றிக்கொண்டிருக்குமாறு ஒவ்வொரு பந்திலும் ஒரு ரன்னை எடுப்பது திராவிடுக்கு அப்பொழுது சிறிதும் கைவரவில்லை. ஒவ்வொரு பந்தையும் நேராகப் பந்துத் தடுப்பாளர் கையில் அடித்துவிட்டு பரிதாபமாக நின்று கொண்டிருப்பார். அதனால் அவ்வப்போது ஒருநாள் போட்டி விளையாட வருவார், பின்னர் அணிக்கு வெளியே இருப்பார்.

2001/02 மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி நிர்வாகம் உலகக்கோப்பை 2003ஐ மனதில் வைத்து இனி திராவிடை விக்கெட் கீப்பராக்கி விடலாம் என்று முடிவு செய்தனர். அதற்கு முன் கூட அவ்வப்போது  திராவிட் (ஒன்பது) ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்திருக்கிறார்.

ஆனால் இன்றைக்குப் பார்க்கும்போது திராவிட் ஒருநாள் போட்டிகளிலும் முன்னணி வீரராக உலக அளவிலேயே இருக்கிறார். PwC ரேட்டிங்கில் உலக அளவில் ஏழாவது, இந்தியாவில் டெண்டுல்கர் ஒருவர் மட்டும்தான் திராவிடுக்கு மேல், உலக அளவில் நான்காவது. ஆனால் அப்படியிருந்தும், இந்திய அணி நிர்வாகம் தன் வசதியைக் கருதி திராவிட் தலையில் மீண்டும் மீண்டும் விக்கெட் கீப்பிங்கைத் திணிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவால் திறமையான ஒரு விக்கெட் கீப்பரைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே.

குழந்தை முக பார்த்திவ் படேல் இப்பொழுது இந்தியாவின் முன்னணி விக்கெட் கீப்பராகக் கருதப்படுகிறார். ஆனால் இதுவரை ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடிய போதெல்லாம் நமக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றமே. சொல்லப்போனால் டெஸ்டு போட்டிகளிலும் இவரிடமிருந்து நமக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றம்தான். இன்னும் இவர் இந்திய அணியில் இருப்பதற்குக் காரணம் தீவிரமான போட்டி வேறு யாரிடமிருந்தும் வராதிருப்பதே. பார்திவ் படேலுக்கு முன் இந்தியா தீப் தாஸ் குப்தா, அஜய் ராத்ரா ஆகிய இருவரையும் பயன்படுத்தியது. தீப் தாஸ் குப்தா மிக மோசமான விக்கெட் கீப்பர். அஜய் ராத்ரா சுமார்தான். இருவரும் டெஸ்டு போட்டிகளில் ஆளுக்கொரு சதம் அடித்துள்ளனர். இதில் அஜய் ராத்ராவுக்கு மீண்டும் வாய்ப்பளித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இவர் படேலை விட சற்றே திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நான் கருதுகிறேன்.

அதே நேரத்தில் புதிதாக சிலரையும் முயன்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் என்பவர் இப்பொழுது இந்தியா-ஏ அணியுடன் ஜிம்பாப்வே, கென்யா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இவர் இதுவரை ஒரு சீஸன்தான் ரஞ்சிக்கோப்பை விளையாடியுள்ளார். அதிலும் மிக நேர்த்தியாக பேட்டிங் செய்துள்ளார். இவருக்கும் சர்வதேச அளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை பார்திவ் படேலை ரஞ்சிக்கோப்பை விளையாட்டுகளில் ஓரிரு வருடங்கள் விளையாட வைப்பது அவருக்கே நன்மை பயக்குமோ என்றும் தோன்றுகிறது. ஓர் ஆத்திர அவசரத்தில் ஒரு ரஞ்சி ஆட்டம் கூட விளையாடாத படேலை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்றது இந்திய அணி நிர்வாகம். அன்று முதல் இன்றுவரை முறையான பயிற்சி இல்லாது படேல் வீணாகிப் போய்க்கொண்டிருக்கிறார் என நான் நினைக்கிறேன்.

திராவிட் இந்தியாவைப் பொருத்தவரை மிக முக்கியமான விளையாட்டு வீரர். அவரை விக்கெட் கீப்பிங் செய்ய வைத்து அவரது சக்தியை வீணடிக்கிறோம் எனத் தோன்றுகிறது.

ஒருநாள் போட்டிகளில் வேறெந்த நாடும் இதுபோல் தாற்காலிக விக்கெட் கீப்பரை வைத்துப் பொழுதை ஓட்டுவதில்லை. ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், இலங்கையின் குமார் சங்ககாரா ஆகியோர் தனித்திறமை வாய்ந்த மட்டையாளர்களும் கூட. மற்ற நாடுகளின் விக்கெட் கீப்பர்கள் யாரும் இந்த அளவிற்குச் சிறந்த பேட்ஸ்மேன் இல்லையென்றாலும் கச்சிதமான விக்கெட் கீப்பிங் திறமை பெற்றவர்கள். இந்தியா மட்டும்தான் இந்த இரண்டும் இல்லாமல் ஒரு முன்னணி, அதுவும் மிக முக்கியமான, உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை கையில் கிளவ்ஸ் போடச் சொல்லிக் கேவலப்படுத்துகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை செப்டம்பர் 2004க்கு முன்னால் இந்திய அணி மாற்று ஏற்பாடுகளைச் செய்வது அவசியம்.

License

Share This Book