5

கிரிக்கெட் விளையாட்டு என்பது பந்துவீச்சாளர்களுக்கும், மட்டை பிடிப்பவர்களுக்கும் இடையே நடக்கும் போட்டி. ஆனால் இந்தப் போட்டி சம வலுவுடைய இரு கோஷ்டிகளுக்கு இடையே நடப்பதல்ல. எப்பொழுதெல்லாம் பந்து வீச்சாளர்கள் கை ஓங்குகிறதோ, அப்பொழுது ஆட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, மட்டையாளர்கள் கை மேலோங்கி வந்துள்ளது.

தொடக்கத்தில் கிரிக்கெட் ஆடுகளம் மூடப்படாமல் இருந்து வந்தது. மழை, பனி, வெய்யில் போன்ற காரணங்களால் ஆடுகளம் எப்படி விளையாடும் என்று சொல்லமுடியாத முறையில் இருந்தது. திடீரென அரை மணி நேரம் மழை பெய்கிறது என்று வைத்துக்கொள்வோம். மழை நின்று, சிறிது காய்ந்தவுடன் வந்து விளையாட வேண்டும். அப்பொழுது மட்டை பிடித்தாடுவது மிகக் கடினம். ஆடுகளத்தை மூடிவைக்கும் பழக்கம் வந்த பின்னர்தான் மட்டையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிந்தது.

பிராட்மேன் என்னும் மிகப்பெரும் ஆளுமையைத் தடுத்து நிறுத்த வேண்டி இங்கிலாந்து அணித்தலைவர் டக்ளஸ் ஜார்டைன், வேகப்பந்து வீச்சாளர் ஹரால்ட் லார்வுட் இருவரும் சேர்ந்து ‘பாடிலைன்’ என்னும் கால்பக்கம், உடலைக் குறிவைத்துப் பந்துவீசும் முறையைக் கொண்டுவந்தனர். கால் திசையில் மட்டையாளருக்குப் பின்பக்கம் நாலைந்து தடுப்பாளர்களை நிறுத்தி, வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வந்து மட்டையாளரின் லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசி, பந்தை எழும்பி வரச்செய்து உடலின் மேல் அடிப்பதுதான் பாடிலைன். இந்த பிரச்னை தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே பெரிய சண்டையே வந்துவிடும் போலிருந்தது. பின் எம்.சி.சி தலையீட்டால் பாடிலைன் பந்துவீச்சு தடைசெய்யப்பட்டது. கால்திசையில் மட்டையாளருக்குப் பின்னால் இரண்டு பந்துத் தடுப்பாளர்களுக்கு மேல் நிறுத்த முடியாது என்று விதிமுறை வந்தது.

அப்படியும் வேகப்பந்து வீச்சாளர்களால் மட்டையாளருக்குத் தொல்லைதான். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்லி கிரிஃப்ஃபித் பந்துவீச்சில் இந்தியாவின் நாரி காண்டிராக்டர் மண்டையில் அடிபட்டு கிட்டத்தட்ட உயிர் போகிற நிலைமை. தெய்வாதீனமாகத் தப்பினார். தொழில்நுட்பம் பெருகப் பெருக, கால்காப்புகள், தலைக்கவசம், தொடை, முதுகு, கை விரல்கள், முழங்கை என உடல் முழுதையுமே காக்கக்கூடிய, எடை குறைவான காப்புகள் வரத்தொடங்கின.

அப்படியும் வேகப்பந்து வீச்சாளர்கள் தொல்லை தாங்கமுடியவில்லை. முக்கியமாக இங்கிலாந்தினால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியவில்லை. எனவே ஓர் ஓவரில் தலைக்கு மேல் செல்லக்கூடிய மாதிரி ஒரு பந்துதான் வீசலாம் என்று விதி வந்தது. பின், போனால்போகிறதென்று இரண்டு பவுன்சர்கள் போடலாம் என்றானது.

இடையில் நோபால் விதிமுறை மாறியது. இப்பொழுதிருக்கும் நோபால் விதிமுறைப்படி, பந்துவீச்சாளரின் முன்னங்காலின் சிறு பகுதியாவது கிரீஸில் பின்னால் இருக்கவேண்டும். முன்னால் இருந்த விதிமுறையில் பின்னங்கால் முழுவதுமாக கிரீஸுக்கு உள்ளாக இருக்க வேண்டும். ஆனால் அப்பொழுதெல்லாம் சில வேகப்பந்து வீச்சாளர்கள் பின்னங்காலை கிரீஸின் பின் வைத்து, காலை இழுப்பதன் மூலம் நன்கு முன்னே வந்து வீசி, அதன்மூலம் தங்கள் பந்தின் வேகத்தை இன்னமும் அதிகமாக்கினர். இதைத் தடுக்கவே முன்னங்கால் நோபால் விதிமுறை வந்தது. இதனால் மட்டையாளர்களுக்கு சவுகரியம்தான்.

ஆக, எப்பொழுதெல்லாம் பந்துவீச்சாளர் கை ஓங்குவது போலத் தெரிகிறதோ, புதிய விதிகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை மட்டையாளர்களுக்கு ஆதரவளித்தன.

இப்பொழுது சிறு மாற்றம்.

கடந்த சில வருடங்களில் பல பந்துவீச்சாளர்கள் பந்துகளை வீசுவதில்லை, எறிகிறார்கள் என்றதொரு குற்றச்சாட்டு பெரிதானது. அதென்ன வீசுதல் வேறு, எறிதல் வேறா என்று கேட்கலாம். ஆங்கிலத்தில் bowl என்பதை வீசுதல் என்றும், throw என்பதை எறிதல் என்றும் குறிப்பிடுகிறேன். அதாவது கை, தோள்பட்டையிலிருந்து சுழன்று, நடுவில் எங்கும் நிற்காமல், முழங்கையருகே ‘அதிகமாக’ வளையாமல் ஒரே சீராகப் பந்தை வீசுவது bowling. அப்படி இல்லாமல் கையை சடாரென்று நிறுத்தியோ, முழங்கையருகே ‘அதிகமாக’ வளைந்த விதத்திலோ பந்தைப் போடுவது எறிதல், அல்லது throwing.

பந்து வீசும்போது முழங்கைக்கு மேலும், கீழும் உள்ள பாகங்கள் முழுவதும் நேராக இருப்பதில்லை. ஓரளவுக்கு வளைந்துதான் இருக்கும். இப்பொழுதுள்ள விதிகளின்படி முழங்கைக்கு மேலும் கீழும் உள்ள பகுதிகளுக்கு இடையேயான கோணம் 5 இலிருந்து 10 டிகிரி வரை இருக்கலாம். மெதுவாகப் பந்துவீசுபவர்களுக்கு இந்தக் கோணம் 5 டிகிரிதான் இருக்க முடியும். மிதவேகப் பந்துவீச்சாளர்களுக்கு 7.5 டிகிரிகள். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 10 டிகிரிகள் இருக்கலாம்.

அப்படி இல்லாமல் பந்து வீசினால், அந்தப் பந்து எறியப்பட்டது என்று கருதி, நோபால் என்று நடுவர் அறிவிக்கலாம். அதுமட்டுமல்ல, அந்தப் பந்துவீச்சாளர் வெகு விரைவில் வெளியேற்றப்பட்டு, பந்துவீசும் முறையை மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார். காலம் முழுவதும் சில பந்துவீச்சாளர்கள் களங்கம் படிந்த பெயருடனே இருக்க வேண்டியிருக்கும். இலங்கையின் முத்தையா முரளிதரன், பாகிஸ்தானின் ஷோயப் அக்தர், இந்தியாவின் ஹர்பஜன் சிங் என பலரும் ‘எறிதல்’ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்தான். முரளிதரன் இன்னமும் தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டியுள்ளது. அதற்கு பயோமெக்கானிக்ஸ், பிறவியிலேயே கையில் எலும்பு வளைந்துள்ளது எனப் பலவற்றைத் துணைக்கு அழைக்க வேண்டியுள்ளது.

ஐசிசி, செப்டெம்பர் 2004 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டங்களின்போது விளையாடிய பலரையும் அதிவேக கேமரா மூலம் (விநாடிக்கு 250 பிரேம்கள்) படமெடுத்து, அந்தப் படங்களை கவனமாகப் பரிசீலித்தது. அதைப் பார்த்தபொழுது பந்துவீசிய அனைவருமே (ராம்நரேஷ் சார்வன் எனும் ஒரேயொருவரைத் தவிர!) கைகளை பத்து டிகிரிக்கு மேல் வளைத்தனர் என்னும் அதிர்ச்சி தரக்கூடிய உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது யாருமே ஒழுங்கில்லையாம்! அப்படியானால் யார் இனி முரளிதரனை மட்டும் தனித்துக் குற்றம் சாட்ட முடியும்?

இதனால் முழங்கைக் கோணத்தை 15 டிகிரிகளாக – அனைத்துவிதப் பந்துவீச்சாளர்களுக்கும் சேர்த்து – உயர்த்த முடிவு செய்து, அதனை வரும் ஐசிசி எக்சிகியூட்டிவ் கமிட்டியில் கலந்தாலோசிக்க இருக்கிறார்கள்.

பலர் இதை வரவேற்றிருக்கிறார்கள். சிலர் – முக்கியமாக ஆஸ்திரேலியர்கள் – எதிர்க்கிறார்கள்.

இதில் எதிர்க்க என்று ஒன்றுமே இல்லை என்பது என் கருத்து. விதிமுறைகள் மாற்றப்பட வேண்டியவையே. சரியான காரணங்கள் இருந்தால். இப்படி கோணத்தை அதிகரிப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு தனி பலம் கிடைக்குமா? இதனால் அதிக விக்கெட்டுகளை அவர்கள் எடுப்பார்களா?

அப்படியொன்றும் நடக்கப்போவதில்லை. சில வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் கைக்கோணத்தை அதிகரிப்பதன் மூலம் தங்கள் வேகத்தை இன்னமும் அதிகப்படுத்தலாம். முக்கியமாக ஷோயப் அக்தர் வீசும் பல அதிவேகப் பந்துகள் இந்த வகையைச் சார்ந்தவை. ஆனால் அக்தரை விட மெக்ராத் தான் எதிரணியைப் பயமுறுத்துகிறார். எனவே மட்டையாளர்கள் கவலைப்படாது விளையாட வேண்டும்.

எது எப்படியாயினும் பந்துவீச்சுக்கு ஆதரவாக ஒரு விதியாவது போவது தவறில்லை.

License

Share This Book