17

 

Steve Harmison

இங்கிலாந்தின் ஸ்டீவ் ஹார்மிசன் என்பர்தான் உலகிலேயே நம்பர் 1 டெஸ்ட் பவுலர் என ஒரு செய்தி வந்தது. யார் சொல்வது? ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்’ (PWC) எனும் நிறுவனம் அமைத்துள்ள கிரிக்கெட் ரேட்டிங் படிதான் இந்தத் தகவல்.

PWC யார்? அவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?

PWC என்பது புகழ்பெற்ற ஒரு பன்னாட்டு அக்க்கவுண்டிங் & ஆடிடிங் (accounting & auditing) நிறுவனம். 1987இல், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் டெட் டெக்ஸ்டர் (இவர் முன்னாள் இங்கிலாந்து கேப்டனும் கூட) இந்த நிறுவனத்தை அணுகி (அப்பொழுது நிறுவனத்தின் பெயர் டெலாயிட்ஸ்) கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் யார் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் என்பதைக் கணித பூர்வமாக நிறுவமுடியுமா என்று கேட்டிருந்தார்.

டெலாயிட்ஸ் அப்பொழுது உருவாக்கியதுதான் டெலாயிட்ஸ் ரேட்டிங். (பின் டெலாயிட்ஸ், கூப்பர்ஸ் & லைப்ராண்ட்ஸ் ஆனது. பிறகு பிரைஸ்வாட்டர்ஹவுஸோடு இணைந்து பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் ஆனது. எனவே டெலாயிட்ஸ் ரேட்டிங்கும், கூப்பர்ஸ் & லைப்ராண்ட்ஸ் ரேட்டிங்காக மாறி, இப்பொழுது PWC ரேட்டிங்ஸ் ஆக உள்ளது.)

சரி, இந்த ரேட்டிங் எப்படி இயங்குகிறது? நம்மூரில் ‘டாப் டென்’ பாடல்கள் என்று சொல்வோமே, அது எப்படி இயங்குகிறது? நான்கு பேர் கூடி ‘இந்த பாட்டு நல்லாயிருக்கு, இதுதான் முதல்’ என்று சொல்லியிருப்பார்கள். சிலர் வாசகர்கள் கொடுக்கும் வாக்குகளை வைத்துத் தீர்மானிக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டைப் பொருத்தவரை கைவசம் நிறைய நம்பர்கள் உள்ளன. அதைவைத்து யார் உசத்தி, யார் மட்டம் என்று தீர்மானித்து விடலாம்.

ஆனால் எல்லா நம்பர்களும் சமமாகுமா?

(அ) டெண்டுல்கர் ஜிம்பாப்வேக்கு எதிராக 120 ஓட்டங்கள் எடுக்கிறார். திராவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 120 ஓட்டங்கள் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். யார் எடுத்த ஓட்டங்கள் அதிக மதிப்புடையது?

(ஆ) டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 225* ஓட்டங்கள் எடுக்கிறார். ஆட்டம் டிராவில் முடிகிறது. இந்திய அணியில் இன்னமும் இரண்டு பேர் சதமடித்துள்ளனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 630/7 டிக்ளேர்ட். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 647 ஆல் அவுட். அந்த அணியிலும் மூன்று பேர்கள் சதமடித்துள்ளனர். அடுத்த மேட்சில் திராவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 225* ஓட்டங்கள் எடுக்கிறார். இந்தியா ஜெயிக்கிறது. திராவிடுக்கு அடுத்து இந்திய அணியில் பெரிய ஸ்கோர் 79. எதிரணியில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தலா ஒரு சதம் உண்டு. ஸ்கோர்: ஆஸ்திரேலியா 289 & 245, இந்தியா 457 (திராவிட் 225*) & 83/3.

இப்பொழுது சொல்லுங்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெண்டுல்கர், திராவிட் இருவரும் 225* ஓட்டங்கள் அடித்திருந்தாலும், இரண்டும் சமமா?

(இ) கும்ப்ளே, பாலாஜி இருவருமே ஒரு இன்னிங்ஸில் தலா ஐந்து விக்கெட்டுகள் எடுக்கின்றனர். கும்ப்ளே எடுத்தது அத்தனையும் கடைசியாக விழுந்த வால் விக்கெட்டுகள். பாலாஜி எடுத்தது முதல் ஐந்து விக்கெட்டுகள். யார் எடுத்த விக்கெட்டுகளுக்கு அதிக மதிப்பு?

இதற்கெல்லாம் பதில் சுலபமானதாகவே இருக்கும். ஆனால் இதையே எண்களாகக் காட்ட வேண்டுமென்றால்? அதாவது ஜிம்பாப்வேக்கு எதிராக எடுக்கும் 120 ஓட்டங்களுக்கு மதிப்பு வெறும் 86தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுக்கும் 120 ஓட்டங்களின் மதிப்பு 137. இப்படி. இதை ஒரு ஃபார்முலாவாகக் கொடுக்க முடியுமா? அதைத்தான் PWC ரேட்டிங் செய்கிறது.

இதை எப்படிச் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

1. சீர்தூக்கிய சராசரி (weighted average): ஒருவர் கடைசியாக விளையாடிய இன்னிங்ஸில் அடித்த எண்ணிக்கைக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு இன்னிங்ஸ் பின்னோக்கிப் போகும்போதும் அதன் மதிப்பு 4% குறைந்து கொண்டே போகும். அதாவது டெண்டுல்கர் மூன்று இன்னிங்ஸில் 70, 50, 30 என்று ஓட்டங்கள் பெற்றுள்ளார்; திராவிட் 30, 50, 70 என்று வைத்துக்கொள்வோம். திராவிடுக்குத்தான் அதிக மதிப்பு.

2. ஒரு வீரர் ஓர் ஆட்டத்தில் என்ன காரணத்துக்காகவாவது ஈடுபடவில்லையென்றால் – காயம் பட்டிருக்கலாம், வீட்டில் தொல்லை, அல்லது கேப்டன் அவரை விளையாடாது செய்திருக்கலாம் – எதுவாக இருந்தாலும், அவரது  மதிப்புலிருந்து டெஸ்டாக இருந்தால் 1% குறையும், ஒருநாள் போட்டியாக இருந்தால் 0.5% குறையும்.

3. எதிராளியின் பலம்: எதிரணியில் இருக்கும் பவுலர்களின் PWC ரேட்டிங்கைக் கணக்கில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பந்து வீச்சாளரும் எவ்வளவு ஓவர்களை வீசியுள்ளனர் என்று கணக்கிட்டு அதன்மூலம் சராசரி பந்துவீச்சு ரேட்டிங்கைத் தீர்மானிப்பர். இந்த சராசரி பவுலிங் ரேட்டிங் உலக சராசரியை விட எவ்வளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதோ அதற்கேற்ப ஒரு மட்டையாளர் எடுத்த ஓட்டங்கள் அதிகமாகும், அல்லது குறையும். PWC ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளில் அதிக ரன்கள் எடுத்தால் அது நம் கணக்கில் இன்னமும் அதிகமாகும். சோப்ளாங்கி டீமுக்கு எதிராக ரன் எடுத்தால் அது குறைக்கப்படும்.

4. எல்லோரும் ரன்கள் குவித்தால்? : ஓர் ஆட்டத்தில் விக்கெட்டுக்கு எவ்வளவு ரன்கள் சராசரியாக அடிக்கப்படுகின்றன என்பதைக் கணித்து, அந்தச் சராசரிக்குக் குறைவாக அடித்தவர்களின் பாயிண்டுகள் குறைக்கப்படும், சராசரியை விட அதிகமாக அடித்தவர்களுக்கு பாயிண்டுகள் ஏறும். ஆக எல்லோரும் 20க்கு மேல் அடிக்காதபோது ஒருவர் மட்டும் 80 ரன்கள் அடித்தால் அதன் மதிப்பு எக்கச்சக்கமாக உயரும்.

5. வெற்றிக்கு மதிப்பு: யார் அணி வெற்றி பெற்றிருக்கிறதோ, அவர் அடித்த ரன்களுக்கோ, எடுத்த விக்கெட்டுகளுக்கோ அதிக மதிப்பு கொடுக்கப்படும். (தோற்றவர்களுக்கு குறைவில்லை.)

6. நாட் அவுட்: ஒரு பேட்ஸ்மேனின் சராசரியைக் கணக்கிடும்போது அவரது நாட் அவுட்டுகள் அவரது சராசரியைக் கூட்டும். ஆனால் அந்த வகையில் செயல்படாது, PWC ரேட்டிங்கில் நாட் அவுட்டுக்கு என்று கொஞ்சம் போனஸ் கிடைக்குமே ஒழிய எக்கச்சக்கமான கூடுதல் இருக்காது.

7. ஒருநாள் போட்டிகளுக்காக: மேற்சொன்னவற்றிலிருந்து இரண்டு அதிகப்படியான விஷயங்களை ஒருநாள் போட்டிகளுக்காக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். அது பேட்ஸ்மேனுக்கு ஸ்டிரைக் ரேட் – அதாவது எவ்வளவு வேகமாக ரன்களைப் பெறுகிறார் என்பது. பவுலர்களுக்கு எகானமி ரேட் – எவ்வளவு குறைந்த ஓட்டங்களைத் தன் ஓவரில் தருகிறார் என்பது. அதைத் தவிர இப்பொழுதெல்லாம் கென்யா, அமீரகம் போன்ற குட்டி குட்டி அணிகளும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதால், அவற்றுக்கு எதிராகப் பெறும் ரன்களும், விக்கெட்டுகளும் குறைத்து மதிப்பிடப்படும்; அதுபோல உலகக்கோப்பையில் பெறும் ரன்கள், விக்கெட்டுகளுக்கு சற்று அதிக மதிப்பு கொடுக்கப்படும்.

ஆக இத்தனையையும் ஒரு பெரிய ஈக்வேஷனாக மாற்றி ஒவ்வொரு ஆட்டம் முடிந்ததும் பாயிண்டுகள் கணக்கிடப்படும். அப்படிச் செய்ததில்தான் இப்பொழுதைய உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ராஹுல் திராவிட். பெற்றுள்ள பாயிண்டுகள் 892. (1000தான் ஒருவர் மிக அதிகமாகப் பெறக்கூடிய பாயிண்டுகள்.). அடுத்து ஆஸ்திரேலியாவின் மாத்தியூ ஹேய்டன், அடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா. சச்சின் டெண்டுல்கர் இப்பொழுதைக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார்.

இப்பொழுதைக்கு மிகச்சிறந்த டெஸ்ட் பவுலர் இங்கிலாந்தின் ஸ்டீவ் ஹார்மிசன் (875 பாயிண்டுகள்). அடுத்து இலங்கையின் முத்தையா முரளிதரன், மூன்றாவதாக தென்னாப்பிரிக்காவின் ஷான் போலாக். இந்தியாவின் அனில் கும்ப்ளே ஏழாம் இடம்.

ஒருநாள் போட்டிகளில் முதலாவது பேட்ஸ்மேன் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்! (792 பாயிண்டுகள்). அடுத்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், மூன்றாவதாக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட். ராஹுல் திராவிட், ஏழாம் இடத்தில் இருந்தவர் தற்போது சரிந்து 14 இடத்துக்கு வந்துவிட்டார்.

பந்துவீச்சாளர்களில் முதலாவது இலங்கையின் சமிந்தா வாஸ் (889 பாயிண்டுகள்). அடுத்து முத்தையா முரளிதரனும், ஷான் போலாக்கும். இந்தியாவின் ஹர்பஜன் சிங் 15வது இடத்தில்.

இதற்கு மேல் தூண்டித் துருவிப் பார்த்து யார் யார் எந்த நேரத்தில் எத்தனை பாயிண்டுகள் பெற்று முதல் பத்தில் இருந்தனர் என்பதையும், உங்களுக்குப் பிடித்த இரண்டு மட்டையாளர்களோ, பந்து வீச்சாளர்களோ எப்படி ஒப்பீட்டில் ஒருவரை ஒருவர் முந்தி வந்துள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள போக வேண்டிய இடம்: PWC ரேட்டிங் தளம்.

License

Share This Book