7

கீத் மில்லர் பற்றிப் பேசும்போது ஒரு கதையைச் சொல்வார்கள். அவர் கேப்டனாக இருந்த ஓர் உள்ளூர் ஆட்டத்தில் பந்துத் தடுப்பு வியூகம் அமைக்க வேண்டியிருந்தது. தன்னைச் சுற்றியிருக்கும் அணியினரைப் பார்த்து ஆங்காங்கே கிடைக்கும் இடத்தில் போய் நில்லுங்கள் என்று அவர் சொன்னாராம்!

இன்று தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் பலருக்கும் யார் யார் எங்கு நிற்கிறார்கள், ஏன் என்பது அதிகம் புரிவதில்லை. ஓரளவுக்கு தடுப்பு வியூகம் பற்றி இங்கு விளக்கிச் சொல்ல முற்படுகிறேன்.

பந்துத் தடுப்பு வியூகத்தை அமைக்கும் வேலை அணித்தலைவருடையது. அவர் தன்னிச்சையாக இதைச் செய்வதில்லை. பந்து வீச்சாளரிடம் பேசி, ஆலோசித்து, பின் அவருக்குத் தேவையான வியூகத்தைத்தான் தர முனைகிறார்.

மட்டையாளர் எப்படி நிற்பார் என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டு பக்கமுமுள்ள நடு ஸ்டம்ப்களை இணைத்து ஒரு நேர்கோடு வரைந்து அதை அரங்கின் இரு கோடிக்கும் நீட்டினால் மைதானம் இரண்டு பிரிவுகளாக இருக்கும். மட்டையாளரின் மட்டை ஒரு பகுதியில் வரும் – இது ‘ஆஃப்’ திசை. மட்டை இருக்கும் பக்கம் என்றும் சொல்லலாம். மறுபகுதியில் அவரது கால்கள் இருக்கும் – இது ‘ஆன்’ திசை அல்லது கால் திசை ஆகும்.

எப்பொழுதுமே ஆஃப் பக்கத்தில் பந்துகளை அடிப்பதுதான் சுலபமானது. அந்தப் பக்கத்தில்தான் மட்டையை முழுவதுமாக வீசலாம். கால் பக்கத்தில் பந்துகளை அடிப்பது கடினமானது. இதனால்தான் ஆட்டத்தின் முக்கால்வாசி நேரமும் ஆஃப் திசையில் அதிகமான பந்துத் தடுப்பாளர்கள் இருப்பார்கள்.

விக்கெட் கீப்பர், பந்து வீச்சாளர் ஆகிய இருவர் போக மொத்தம் ஒன்பது பந்து தடுப்பாளர்கள் மட்டையாளர்களால் அடிக்கப்படும் பந்துகளைத் தடுக்கும் வேலையைச் செய்வார்கள். இந்தத் தடுப்பாளர்களை, இவ்வளவு பெரிய மைதானத்தில் எங்கெங்கு நிறுத்துவது, அப்படி நிறுத்துவதன் மூலம் ரன்களை எவ்வளவு குறைவாகக் கொடுக்க முடியும், கேட்ச்களைப் பிடிக்க முடியும் என்பதுதான் அணித்தலைவரது வேலை. கொடுக்கப்பட்டிருக்கும் தடுப்பு வியூகத்துக்கு ஏற்ற முறையில் பந்து வீசுவதுதான் பந்து வீச்சாளரின் வேலை.

தடுப்பு வியூகங்களில் உள்ள சில இடங்களின் பெயர்களைப் பார்ப்போம். முதலில் ஆடுகளம் எப்படியிருக்கும் என்பதை ஒருமுறை கீழே உள்ள படத்தில் பார்த்துவிடவும். இங்கு வலது கை மட்டையாளர் ஒருவர் ஆடுவதாக வைத்துக் கொள்வோம். இடதுகை மட்டையாளர் என்றால் எல்லாமே கண்ணாடி பிம்பங்களாக இட-வலம் மாறும்.

Ground  Zonesமைதானத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது வழக்கம். நாம் தலைகீழாக ‘6’ம் பகுதியிலிருந்து அ-ப்ரதக்ஷிணமாக வருவோம். ஸ்லிப் (Slip), கல்லி (Gully), தர்ட்மேன் (Thirdman) ஆகியவை இந்தப் பகுதியில் வரும் தடுப்பு வியூகங்களின் பெயர்கள். ஸ்லிப், கல்லி இரண்டுமே ரன்களைத் தடுக்கும் இடங்கள் அல்ல, கேட்ச் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இடங்கள். தர்ட்மேன் தான் ரன்களைத் தடுப்பதற்காக எல்லைக்கோட்டின் அருகே வைக்கப்பட்டிருக்கும் இடம். இந்தப் பகுதியில் பொதுவாக கட் (cut), ஸ்கொயர் டிரைவ் (square drive), ஸ்டியர் (steer) ஆகிய அடிகள் போகும். விளிம்பில் பட்டும் நிறைய அடிகள் போகும்.

அடுத்து ‘5’ம் பகுதி. இங்குதான் பாயிண்ட் (Point), கவர் (Cover) ஆகிய இரண்டு முக்கிய இடங்கள். இவை ரன்களைத் தடுப்பதற்கும், கேட்ச்களைப் பிடிப்பதற்கும் உதவும் இடங்கள். ஆஃப் திசையில் பொதுவாக இந்தப் பகுதியில்தான் அதிகபட்ச ரன்கள் கிடைக்கும். கட் (cut), டிரைவ் (drive), புஷ் (push) ஆகிய அடிகள் இந்தப் பகுதிக்கு வரும். எல்லைக்கோட்டிற்கு அருகில் இந்தப் பகுதியின் ரன்களைச் சேமிக்க ஸ்வீப்பர் கவர் (Sweeper Cover) என்ற தடுப்பாளர் சில சமயங்களில் நிறுத்தப்படுவார். சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது மட்டையாளருக்கு வெகு அருகில் சில்லி பாயிண்ட் (Silly point), சில்லி மிட்-ஆஃப் (Silly mid-off) போன்ற தடுப்பாளர்களையும் நிற்க வைப்பதுண்டு. கவர் பகுதியில் சில சமயம் இரண்டு ஆட்டக்காரர்களை நிறுத்துவது வழக்கம். கவருக்கும், பாயிண்டுக்கும் இடையில் அவர் நிற்பார் என்றால் அந்த இடத்திற்கு கவர் பாயிண்ட் (Cover point) என்று பெயர். கவருக்கும் பந்து வீச்சாளருக்கும் இடையில் என்றால் எக்ஸ்டிரா கவர் (Extra cover).

‘4’ம் பகுதியில் மிட் ஆஃப் (Mid-off), லாங் ஆஃப் (Long-off) என்னும் இடங்கள் உண்டு. இவை பொதுவாக ஓட்டங்களைத் தடுத்து நிறுத்தவே. இந்தப் பகுதிகளில் டிரைவ் அடிதான் அதிகம். மேலாகத் தூக்கி அடிக்கப்படும் (lofted shot) அடியும் இங்கு ஓட்டங்களைப் பெற்றுத்தரும்.

‘3’ம் பகுதியில் மிட் ஆன் (Mid-on), லாங் ஆன் (Long-on) என்னும் இடங்கள். மேற்சொன்னதைப் போன்ற அடிகள்தான் இங்கும்.

டிரைவ் என்பது மட்டையை நெடுக்காக (மேலிருந்து கீழ்) வைத்து, பின்னாலிருந்து முன்னுக்கு வேகமாகக் கொண்டுவந்து பந்தை அடிப்பது. கவர் திசையிலிருந்து மிட்-ஆன் வரையில் டிரைவ் அடியை அடிக்கலாம். கவரில் அடித்தால் கவர் டிரைவ், மிட்-ஆஃப் திசையில் அடித்தால் ஆஃப் டிரைவ், நேராக அடித்தால் ஸ்டிரெயிட் டிரைவ், மிட்-ஆன் பக்கம் அடித்தால் ஆன் டிரைவ். அவ்வளவுதான். சேவாக், லக்ஷ்மண் போன்ற மட்டையாளர்கள் பந்தை நன்றாக ‘டைம்’ செய்து அடிப்பார்கள். அதாவது மட்டையை சரியான நேரத்தில், சரியான இடத்தின் வழியாக எதிர்கொண்டு அடிப்பது. அப்பொழுது அவர்கள் முழுதாக மட்டையை செலுத்தி அடிக்க வேண்டியதில்லை. பேட்டில் பட்டவுடனேயே பந்து எல்லைக்கோட்டுக்குப் பறக்கும். அதனால் சில சமயம் தடுத்தாடுவது போலத் தோன்றும் அடிகளும் கூட நான்கு ரன்களைப் பெற்றுத்தரும்.

கட் என்னும் அடி மட்டையைக் குறுக்காக (இட வலமாக) வைத்து பந்தின் பறக்கும் திசைக்குக் குறுக்காக வெட்டி ஆடுவது. இப்படி அடிக்கும் அடி ஸ்லிப் திசையிலிருந்து கவர் திசை வரைப் பயணிக்கும்.

அடுத்து ‘2’ம் பகுதிக்கு வருவோம். இங்கு புல் (Pull), பிளிக் (Flick) ஆகிய அடிகள் பொதுவாகச் செல்லும். புல் என்பது பந்தை மட்டையால் அடியிலிருந்து மேல்நோக்கி அடிப்பது. பிளிக் என்பது மட்டையை நெடுக்காக வைத்து மணிக்கட்டைத் திருப்புவதன் மூலம் பந்தின் திசையைத் திருப்புவது. இந்த அடிகள் ஸ்கொயர் லெக்கிலிருந்து (Square leg) மிட் விக்கெட் (Mid wicket) வரை பயணிக்கும். சில பிளிக் அடிகள் ‘1’ம் பகுதிக்கு பயணிக்கும். கால் திசையில் மட்டையாளருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பயமுறுத்துவது ஃபார்வர்ட் ஷார்ட் லெக் (Forward short leg).

சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை, குனிந்து பக்கவாட்டில் மட்டையை வைத்து, தரையைப் பெருக்குவது போல அடிப்பது ஸ்வீப் (Sweep). இப்படி அடிப்பது ஸ்கொயர் லெக்கிலிருந்து ஃபைன் லெக் வரை செல்லும். வேகப்பந்து வீச்சாளர்கள் அளவு குறைந்து, உயரம் அதிகமாக, கால் திசையில் வீசும் பந்துகளை அடி வழியாகத் தூக்கி மேலெ அடிப்பது ஹூக் (Hook) – கொக்கி போடுவது. இதுவும் ‘1’ம் பகுதிக்குச் செல்லும்.

ஒவ்வொரு தடுப்பு இடங்களின் பெயர்களையும் இந்தப் படத்தில் கொடுத்துள்ளேன். அந்த இடங்களில் எண்களுக்கு சமமான பெயர்கள் இங்கே.

Ground fielding Positions.jpgWk – விக்கெட் கீப்பர்
B – பந்துவீச்சாளர்
1 – முதல் ஸ்லிப்
2 – இரண்டாம் ஸ்லிப்
3 – மூன்றாம் ஸ்லிப்
4 – கல்லி
5 – தர்ட்மேன்
6 – பாயிண்ட்
7 – கவர்
8 – மிட் ஆஃப்
9 – ஸ்வீப்பர் கவர்
10 – லாங் ஆஃப்
11 – லாங் ஆன்
12 – மிட் ஆன்
13 – மிட் விக்கெட்
14 – டீப் மிட் விக்கெட்
15 – ஸ்கொயர் லெக்
16 – பேக்வர்ட் ஸ்கொயர் லெக்
17 – ஷார்ட் ஃபைன் லெக்
18 – ஃபைன் லெக்
19 – சில்லி பாயிண்ட்
20 – ஃபார்வர்ட் ஷார்ட் லெக்

 

இந்த இடங்களைத் தெரிந்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் எம்மாதிரியான பந்துகளில் எம்மாதிரியான ஷாட்களை அடிக்க முடியும் என்று பார்ப்போம்.

License

Share This Book