13

கடந்த கிரிக்கெட் சீசன் (2003-04) இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல நேரம். ஆஸ்திரேலியாவுக்குச் சென்று போட்டித் தொடரை டிரா செய்தது. பாகிஸ்தானுடன் பல வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட்களில் விளையாடியது. பாகிஸ்தானில் முதன் முறையாக டெஸ்ட் ஆட்டத்தில் வென்றது, தொடரையும் வென்றது. இந்திய வீரர் ஒருவருக்கு (சேவாக்) டெஸ்டில் ஓர் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் கிடைத்தது. டெண்டுல்கர் இல்லாமலே ஜெயிக்கலாம் என்ற நிலை. புது நம்பிக்கை நட்சத்திரங்களாக இர்பான் பதான், பாலாஜி ஆகிய பந்துவீச்சாளர்கள் கிடைத்தது… உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ராகுல் திராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆனால் இந்த வருடம் ஆரம்பமே சரியில்லை. சீசன் தொடங்கும் முன்னால், வரிசையாக மூன்று ஒருநாள் போட்டிகளில் படுதோல்வி. அட, அது கூடப் போகட்டும், வரும் டெஸ்ட் தொடர்களில் சரியாக விளையாட வேண்டும் என்ற நிலையில், டெண்டுல்கருக்குக் காயம். பாலாஜியும் ஆஸ்பத்திரியில்.

போதும் போதாதற்கு சேவாக், லக்ஷ்மண் இருவருக்கும் பேட் பிடிப்பது சுத்தமாக மறந்து போய்விட்டது.

அட, அதுகூடப் பரவாயில்லை என்றால், ஜக்மோகன் தால்மியாவும், இ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தொலைக்காட்சி சானல்களும் இந்திய கிரிக்கெட்டை உண்டு, இல்லை என்று ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை என உள்ளனர்.

தொலைக்காட்சி உரிமம் பற்றிய பிரச்சினை பற்றி உங்களுக்கு விளக்கமாகவே தெரியும். எப்பொழுதோ நடந்து முடிந்திருக்க வேண்டிய ஏலத்தை, தால்மியா எவ்வளவு தள்ளிப்போட முடியுமோ, அவ்வளவு தள்ளிப்போட்டார். விளைவு? இன்று ஒவ்வொரு கோர்ட்டாக ஏறி, இறங்க வேண்டியுள்ளது. இ.எஸ்.பி.என் கிரிக்கெட் வாரியத்தை கோர்ட்டுக்கு இழுக்க, கிரிக்கெட் வாரியம் ஏலத்தை முழுமையாக ரத்து செய்ய, இதனால் அடுத்து ஜீ உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.

அக்டோபர் 6 தொடங்கவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் நடக்குமா, நடக்காதா என்ற நிலை இப்பொழுது. தொலைக்காட்சியில் ஆட்டங்கள் காண்பிக்கப்படாவிட்டால் ஆஸ்திரேலியா விளையாட வரமாட்டோம் என்கிறார்கள். ஐசிசியும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இப்பொழுது இந்திய கிரிக்கெட்டின் தலைவிதி உச்ச நீதிமன்றத்தின் கையில்.

ஒரேயொரு நல்ல நியூஸ்… பாண்டிங் முதல் டெஸ்ட்டில் (நடந்தால்!) விளையாட முடியாதவாறு, விரலில் எலும்பை முறித்துக் கொண்டுள்ளார்.

சரி, அதை ஈடுகட்ட மற்றுமொரு கெட்ட நியூஸ்… மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஹெர்ஷல் கிப்ஸ், நிக்கி போயே இருவரும், போலீஸ் தலையீடு ஏதும் இல்லாவிட்டால்தான் தாங்கள் விளையாட வருவோம் என்கின்றனர். அவர்கள் இருவராலும் வரமுடியாவிட்டால் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை கேன்சல் செய்வோம் என்று பயமுறுத்துகின்றனர்.

Dalmiyaசரி, இந்தத் தொல்லைகளெல்லாம் எதற்கு என்று தால்மியா பேசாமல் கிரிக்கெட் வாரியத்தை விட்டு விலகலாம் இல்லையா? இரண்டு முழுநேர அரசியல்வாதிகள் அடுத்த தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகச் செய்தி. பாஜகவின் அருண் ஜெயிட்லி. காங்கிரஸின் முன்னாள் ஹரியானா முதல்வர் பன்சி லால் மகன் ரண்பீர் சிங் மகேந்திரா! போதாதற்கு மத்திய உணவு அமைச்சர் சரத் பவார், தானும் தேர்தலில் நுழைய இருப்பதாக அறிவித்தார். இதற்குள் தால்மியா தன்னத்தானே வாழ்நாள் முழுவதற்குமாக ‘பேட்ரன்-இன்-சீப்’ ஆகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இப்பொழுது சரத் பவார் போட்டியிடப்போகிறார் என்பதைக் கேட்டு தானே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகவும் (விதிகளை அங்கும், இங்குமாக தளர்த்தி) தால்மியா வட்டாரங்கள் சொல்கின்றன.

ஆண்டவா! நீதான் இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டும்!

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை

அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்து விட்டது! ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் இது. கடந்த ஒரு வருடத்தில் இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட மாற்றம் வியக்கத்தக்கது. மற்றுமொரு அரையிறுதியில் பாகிஸ்தான் படு கேவலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோற்றுப் போனது. இறுதியாட்டத்தில் இங்கிலாந்து ஜெயிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இரானி டிராபி

உள்நாட்டுக் குழப்பங்கள் எது இருந்தாலும், இந்திய சீசன் தொடங்கி விட்டது. முதல் ஆட்டமான இரானி டிராபி ஆட்டத்தில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, ரஞ்சிக் கோப்பை சாம்பியன் மும்பை அணியைத் தோற்கடித்து விடும் போலத்தான் தோன்றுகிறது.

சென்ற வருடம் இரானி ஆட்டம் பிரமாதமாக இருந்தது. சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது மும்பை அணிக்கு டெண்டுல்கரும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு கங்குலியும் அணித்தலைவர்களாக இருந்தனர். ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் பந்து வீச்சாளர்கள் ஜாகீர் கான், பாலாஜி, கும்ப்ளே, ஹர்பஜன் சிங். பேட்டிங்கில் பங்கார், சேவாக், திராவிட், லக்ஷ்மண், கங்குலி, யுவ்ராஜ் சிங், பார்த்திவ் படேல்! அதாவது டெண்டுல்கர் தவிர்த்த முழு இந்திய அணி. மும்பை அணியும் சளைத்ததல்ல. டெண்டுல்கர் அணியின் பந்து வீச்சாளர்கள் அகர்கர், சால்வி, பகுதுலே, பொவார் (நால்வரும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்கள்!). பேட்டிங்கில் முக்கியமானவர்கள் வினாயக் மானே, வாசிம் ஜாபர். முதல் இன்னிங்ஸில் மும்பை அணி லீட் எடுக்க, கடைசி இன்னிங்ஸில் திராவிடும் (121), லக்ஷ்மணும் (99) ஜோடி சேர்ந்து ரெஸ்ட் ஆப் இந்தியாவை ஜெயிக்க வைத்தனர். ஸ்கோர் விவரம்: மும்பை 297 (டெண்டுல்கர் 94, பகுதுலே 58, ஜாகீர் கான் 5-77) & 244 (டெண்டுல்கர் 50, பொவார் 57, ஹர்பஜன் சிங் 4-79), ரெஸ்ட் ஆப் இந்தியா 202 (திராவிட் 41, பொவார் 4-61) & 340/7 (திராவிட் 121, லக்ஷ்மண் 99, பகுதுலே 3-61). ரெஸ்ட் ஆப் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தின் வென்றது.

ஆனால் இப்பொழுது நடப்பதோ… டெண்டுல்கர் இல்லாத மும்பை அணி. யாருமே இல்லாத ரெஸ்ட் ஆப் இந்தியா அணி. தினேஷ் மோங்கியா கேப்டன்.

License

Share This Book