9

 

பெங்களூர், சென்னை டெஸ்ட்கள் இரண்டிலும் பார்திவ் படேல் விக்கெட் கீப்பிங்கை நேரில் பார்த்தேன். மிக மோசமாக விளையாடியிருந்தார்.

விக்கெட் கீப்பிங் எளிதான வேலையல்ல. இந்தியாவின் ஆடுகளங்கள் வித்தியாசமானவை. வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகள் அவ்வளவாக எழும்பாது. புதுப்பந்து, முதல் நாள் என்றாலும் கூட பந்து தாழ்ந்துதான் வரும். எழும்புதலும் சமச்சீராக இருக்காது.

இதற்குக் காரணம், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று ஆடுகளத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிளவுகள்தான். இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் – அதுவும் ஆஸ்திரேலியா போன்ற அணிக்கு எதிராக – சுழற்பந்துக்கு ஆதரவான ஆடுகளங்களாக இருந்தால் மட்டும்தான் முடியும் என்று “மேலிடத்தில்” முடிவு செய்வதன் விளைவாக, ஆடுகளத்தில் இருக்கும் மிச்சம் மீதி புல்லும் முழுவதுமாக சரைக்கப்படும். ஆடுகளத்தில் விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டு, முழுவதுமாக நிறுத்தப்படும். வெய்யில் கொளுத்த கொளுத்த, ஆடுகளத்தின் மேற்பரப்பு உதிரத்தொடங்கும். பரப்பு காயும்போது, பிளவுகள் ஏற்படும். ஏற்கனவே உள்ள பிளவுகள் இன்னமும் விரிவடையும். தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் ஆடுகளத்தின் தன்மையைப் பற்றிப் பேசும்போது கையில் உள்ள சாவிக்கொத்திலிருந்து சாவிகளை உள்ளே செருகி, பிளவு எத்தனை மோசம் என்பதைக் காண்பிப்பார்கள்.

இப்படிப்பட்ட பிளவுகளின் ஓரங்களில் பந்து வந்து விழும்போது என்ன வேண்டுமானாலும் ஆகலாம். திடீரென எழும்பலாம். அல்லது தரையோடு உருளலாம். பந்துவீச்சாளரே எதிர்பார்க்காமல் பந்து உள்ளேயே, வெளியேயோ திரும்பலாம். இதனால் மட்டையாளருக்கு மட்டுமல்ல, விக்கெட் கீப்பருக்கும் திண்டாட்டம்தான்!

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முதல் நாள் முதற்கொண்டே நல்ல சுழற்சி கிடைக்கும். அதனால் ஒன்றும் அவ்வளவு தொல்லையில்லை. அடுத்த இரண்டு நாள்களில் மேற்பரப்பில் நிறைய மணற்தூள்கள் உருவாகும். அதில் பந்து பட்டால் எகிறும். தொலைக்காட்சியில் பார்க்கும்போது பந்து விழுந்த இடத்தில் ஒரு சிறு புழுதிப்படலம் உருவாவதையும் நீங்கள் காணலாம்.

இதை எதிர்கொள்வதில் தேர்ச்சியில்லாத மட்டையாளர்கள் மிகவும் சிரமப்படுவர். மட்டையை விட கால் காப்பையும், முதுகையும், பின்பக்கங்களையும் கூட பயன்படுத்தி பந்தினை விக்கெட்டின் மேல் சென்று விழாதவாறு காக்க வேண்டும். முடிந்தவரை மட்டையாளர் பந்தை முழுவதுமாக விட்டுவிடுவார்.

அப்பொழுதுதான் விக்கெட் கீப்பர் தடுமாறுவார். பந்து எகிறி வரும். விக்கெட் கீப்பரோ, விக்கெட்டின் பின் வெகு அருகாமையில் நின்று கொண்டிருப்பார். அவர் குள்ளமானவராகவும் இருந்து விட்டால் பந்தை சரியாகப் பிடிப்பதே கஷ்டம். அத்துடன் அந்தப் பந்து என்ன செய்யப் போகிறது என்பது புரியவில்லையென்றால் சொல்லவே வேண்டாம். அதற்கு மேல் அந்தப் பந்து மட்டையில் விளிம்பில் பட்டு வருகிறது என்றால் இன்னமும் நாசம்தான்!

பார்திவ் படேலுக்கு நம் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன், கும்ப்ளே இருவர் பந்துவீச்சும் இன்னமும் முழுமையாகப் புரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக அவர்களது பந்துவீச்சைப் பார்த்திருக்கிறார், கீப்பிங் செய்துள்ளார் என்றாலும் இந்திய ஆடுகளத்திற்கும், வெளிநாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குப் புரிபடுவதில்லை. கும்ப்ளே பெரும்பாலும் டாப் ஸ்பின், கூக்ளிதான் வீசுவார். பெயருக்குத்தான் அவர் லெக் ஸ்பின்னர். இது தெரிந்திருந்தும் படேல் கும்ப்ளே வீசும் ஒரு கூக்ளியையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கூக்ளி என்பது கிட்டத்தட்ட லெக் பிரேக் போடும் ஆக்ஷனில் கடைசி நேரத்தில் கை விரல்களை வேறு பக்கமாகத் திருப்பி, ஆஃப் ஸ்பின்னாக வீசுவது. வலது கை லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் வீசும் லெக் பிரேக் வலது மணிக்கட்டால் ஏற்படும் சுழற்சியால் ஆனது என்பதை மனதில் கொண்டு கூக்ளி எப்படி வீசப்படும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

திறமையான மட்டையாளராலேயே இந்தப் பந்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும். விக்கெட் கீப்பர் இன்னமும் பின்னால் இருக்கிறார். அதனால் பொதுவாக கூக்ளி என்பதை அடையாளம் கண்டு கொள்ள விக்கெட் கீப்பருக்கு சற்று அதிகம் அவகாசம் உள்ளது. ஆனால் அப்படியும் படேல் கும்ப்ளேயின் கூக்ளிக்களை அடையாளம் காண்பதில்லை. இதுவரை இந்தியாவிற்கு விளையாடிய எந்த விக்கெட் கீப்பரும் இந்த அளவுக்கு மோசமாக விளையாடியதில்லை. ஆம், தீப் தாஸ்குப்தா கூட அவ்வளவு மோசமில்லை. ஏன்? இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியிலும் ஒரு லெக் ஸ்பின்னராவது இருப்பது வழக்கம். அவருக்கு கூக்ளி போடத்தெரியும். அவருக்கு கீப்பிங் செய்து பழகியிருந்தாலே போதும், ஓரளவுக்கு சர்வதேச ஆட்டங்களில் சமாளித்து விடலாம். ஆனால் அங்குதான் படேலின் பிரச்னை ஆரம்பமாகிறது. படேல் இந்தியாவில் ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை ஆட்டங்களில் ஆடிப் பயிற்சி பெறவேயில்லை. நேரடியாக சர்வதெச கிரிக்கெட்டுக்குப் போனார். அங்கேயே விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதைப்போலவே ஹர்பஜன் பந்துவீச்சில், ஆஃப் ஸ்பின் ஆகாது நேராகவோ, அல்லது சற்றே விலகி வெளியே போகும் பந்து – தூஸ்ரா – அதையும் படேல் கணிக்கத் தவறுகிறார். இது கணிக்க மிகவும் கஷ்டமான பந்து. இந்தியாவில் விளையாடும் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் அத்தனை பேராலும் இந்தப் பந்து வீசப்படுவதில்லை. கூக்ளியை வீசாத லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்களே இல்லை எனலாம். ஆனால் வெகு சில ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்களே தூஸ்ரா வீசத் தெரிந்தவர்கள்.

படேல் வெளிநாடுகளின் ஆடுகளங்களில் ஓரளவுக்கு திருப்தியாகவே கீப்பிங் செய்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆடுகளத்தின் மேற்பரப்பு தூள் தூளாகாது. மேற்பரப்பில் உயிருடன் இருக்கும் புல்லையும், செத்த புல்லையும் போட்டுப் பிசைந்து வைத்திருப்பதால் கெட்டியாக இருக்கும். கடைசிவரை தண்ணீர் பாய்ச்சி இருப்பதால் பிளவுகள் கடைசி இரண்டு நாள்கள் வரை தோன்றாது. பந்தின் எழும்புதலை மிகச்சரியாகக் கணிக்க முடியும். பந்தும் கன்னா பின்னாவென்று சுழலாது. ஆனால் வேகப்பந்து வீச்சில் தையல் மூலமாகவோ, அல்லது காற்றிலேயே ஸ்விங் செய்வதன் மூலமோ பந்து அதிகமாக பக்கவாட்டில் நகரும். ஆனால் அம்மாதிரியான பந்துகளுக்கு படேல் அதிகம் தள்ளி நின்று கீப்பிங் செய்வதால் பாய்ந்து சென்று தடுத்து விட முடியும். அதனால்தான் படேல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நமக்காக டெஸ்ட் விக்கெட் கீப்பிங் செய்தபோது அவரது டெக்னிக்கில் எந்தக் குறையையும் நாம் காணவில்லை.

சரி, இப்பொழுது என்ன செய்வது? இந்தப் போட்டித் தொடரில் உள்ள மற்ற இரண்டு டெஸ்ட்களுக்காக புதிதாக ஒருவரைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஆனது ஆகட்டும் என்று படேலையே கீப்பிங் செய்யச் சொல்லலாம். ஆனால் படேல் இடத்தில் தினேஷ் கார்த்திக்கைக் கொண்டு வருவதிலும் அதே பிரச்னைகள்தான். கார்த்திக்கும் இந்தியாவின் ஆடுகளங்களில் நல்ல ஸ்பின் பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொண்டு கீப்பிங் செய்ததில்லை. எனவே அடுத்த ஒரு வருட காலத்துக்கு படேல், கார்த்திக் இருவரையும் உள்நாட்டில் கிரிக்கெட் விளையாடச் சொல்லிவிட்டு தில்லியின் விஜய் தாஹியா அல்லது பிற மாநிலங்களில் வெகு நாள்களாய் கிரிக்கெட் விளையாடும் விக்கெட் கீப்பர் ஒருவரை தற்காலிகமாகக் கொண்டு வரலாம். தாஹியா பேட்டிங்கில் அவ்வளவு சிறப்பாகச் செய்யாவிட்டாலும் விட்டுவிடலாம்.

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் பார்திவ் படேல் எப்படி விலையாடுகிறார் என்பதைப் பார்த்து மீண்டும் அவரையோ, அல்லது அதற்குள் ஸ்பின், வேகப்பந்து இரண்டையும் சரியான விதத்தில் கீப்பிங் செய்யக்கூடியவராகப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால் இப்படியே படேலை தொடர்ந்து அணியில் வைத்திருப்பதால் அவருக்கும் கெடுதல், இந்திய அணிக்கும் கெடுதல்.

License

Share This Book