22

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 82* ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றதும் தான் கொடுத்த பேட்டியில் டெண்டுல்கர்

தன் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

டெண்டுல்கருக்கு யார்மீது, எதனால் கோபம்?

சில மாதங்களாகவே கிரிக்கெட் விமரிசகர்கள் டெண்டுல்கர் மீது இரண்டு விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

1. டெண்டுல்கரின் பேட்டிங்கில் பார்த்து ரசிக்கத்தக்க அம்சங்கள் குறைந்து வருகிறது.
2. டெண்டுல்கர் தன் பேட்டிங்கில் முழு ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை, அவருக்கே தன் பேட்டிங் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது.

இது போன்ற குற்றச்சாட்டுகள் டெண்டுல்கரை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளன என்பது அவரது பேட்டியிலிருந்து தெரிய வருகிறது.

உண்மை நிலை என்ன?

டெண்டுல்கரின் ஆட்டத்தில் பார்த்து மகிழக்கூடிய அம்சங்கள் குறைந்துதான் வருகின்றன. ஒருவரது பேட்டிங்கில் என்னென்ன அம்சங்கள் பார்ப்பவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்?

– ஒரு பந்துவீச்சாளர் வீசும் பந்தின் வேகத்தை (speed), அளவை (length), திசையை (line), நகரும் முறையை (movement) மிகச் சரியாகக் கணிப்பது

– பந்தினை முழுதாகக் கணித்ததும், அந்தப் பந்தினை எதிர்கொள்ளும் முறையை – பந்தினை விட்டுவிடுவதா, தடுத்தாடுவதா அல்லது அடித்தாடுவதா – என்று உடனடியாக மனதில் முடிவு செய்வது.

– அடித்தாடுவது என்றால் எம்மாதிரியான அடி (stroke) என்று தேர்ந்தெடுப்பது. அப்படி அடிக்கும்போது பந்து தரையோடு செல்ல வேண்டுமா, அல்லது மேலாகப் பறந்து செல்ல வேண்டுமா என்பதையும் கண நேரத்தில் தேர்ந்தெடுப்பது. இதற்கு shot selection என்று பெயர்.
– அடியைத் தீர்மானித்த பிறகு, பந்துத் தடுப்பாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் கவனித்து, எங்கு இடைவெளி இருக்கிறது என்பதை அவதானித்து, இடைவெளிகளில் செல்லக்கூடிய மாதிரியாக அடியை அமைப்பது. இதற்கு placement என்று பெயர்.
– அப்படிப்பட்ட அடியைத் தேர்ந்தெடுத்த பின்னர், அதை நிறைவேற்றுவது (execution). அதற்கு முக்கியமாகத் தேவை கால்களை சரியாக நகர்த்தி (foot movement) பந்தினை மட்டையால் சரியான நேரத்தில் சந்திப்பது (timing). ஆக, பார்ப்போருக்கு மகிழ்ச்சி தரக்கூடியதான ஓர் ஆட்டத்தை விளையாடுபவர் சரியாக பந்தைக் கணித்திருப்பார், அந்தப் பந்தை எந்த அடியால் அடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, சரியாகக் கால்களை நகர்த்தி, சரியான அடி மூலமாக பந்தை சரியான நேரத்தில் சந்தித்து, பந்தை தடுப்பாளர்களால் தடுக்க முடியாதவாறு இடைவெளியில் செலுத்தி ஆடுவார். அப்படி விளையாடுபவரது ஆட்டத்தைப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம், உயர்ந்த கலைகளான நாட்டியம், இசை, ஓவியம் ஆகியவற்றை தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் இயற்றிக்காண்பிக்கும்போது நிகழும் அனுபவத்துடன் ஒப்பிடலாம்.

டெண்டுல்கர் சிறுவயது முதற்கொண்டே விளையாட வந்தபோது அவரது கால்களை வேகமாக, சரியாக நகர்த்தும் நேர்த்தி புலப்பட்டது. ஒவ்வொரு பந்திற்கும் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் ஒரு ஸ்டிரோக் ஒன்றை அடிப்பார். பந்து சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு எல்லைக்கோட்டுக்கு ஓடும். டெண்டுல்கரின் ஆட்டத்தை கவனித்து வருவோர் அனைவருமே இப்பொழுது டெண்டுல்கரின் விளையாட்டில் அதே நேர்த்தி இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

எவ்வளவுதான் திறமைசாலியான விளையாட்டு வீரராக இருந்தாலும், அவருக்கு form என்று ஒன்று உண்டு. சில நாட்கள் கால்கள் அசையவே செய்யாது. காலில் இரும்புச்சங்கிலி கட்டிவிட்டதைப் போலிருக்கும். பத்து ஓட்டங்கள் அடிக்கும் வரை எதுவே சரியாக ஓடாது. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே உள்ள பந்துகளை வீணாகத் தொடத் தோன்றும். பந்து சரியாக மட்டையில் படாது. அவ்வப்போது விளிம்பில் பட்டு ஹார்ட் அட்டாக் கொடுக்கும். சில விளையாட்டு வீரர்களுக்கு காலம் பூராவுமே இப்படித்தான். ஆனால் timing, placing, கூரிய கண்பார்வை ஆகியவற்றால் அதிரடியாக விளையாடுவார்கள். கிரிஷ் ஸ்ரீக்காந்த் இப்படியானவர்தான். விரேந்தர் சேவாக் இப்படிப்பட்ட விளையாட்டாளர்தான். நாளடைவில், கண்பார்வை குறையும்போதும், டைமிங், பிளேசிங் திறமை மங்கும்போதும், இவர்களுக்கு ஓட்டங்களைக் குவிப்பது கடினமாகிவிடும்.

தொடக்க காலத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களை கவனிக்க முடிந்தது. ஒன்று பயமின்மை. வயது குறைந்திருந்தும் எந்தப் பந்தையும் எதிர்நோக்கக்கூடிய தைரியம் இருந்தது. தைரியமாக பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகுந்த அபிமன்யூவைப் போன்ற திறமை. ஆனால் அபிமன்யூவையும் விஞ்சி, அந்த பத்ம வியூகத்தை மீண்டும் பிளந்து வெளிவரக்கூடிய திறமை. இரண்டாவது விஷயம், ஒவ்வொரு பந்தையும் சரியான முறையில் கணித்து, மிகச் சிறப்பான ஸ்டிரோக் வழியாக மட்டுமே ஓட்டங்களைக் குவிப்பது. புதுமையான முறையில், எந்த வித்தகரும் எதிர்பார்க்காத innovative அடி மூலம் அடிக்கக்கூடிய திறமை. குறைந்த அளவில் ஆஃப் திசையில் எழுந்து வருகிற பந்தா?

குள்ளமான உருவத்துடன், கால்விரல்களால் எக்கி நின்று, பின்னங்காலில் சென்று பக்கவாட்டில் பந்தை வெட்டி ஆடுவார். சற்றே அளவு கூடி வருகிற பந்தா? முன்னோக்கி வந்து, மட்டையை நெடுங்குத்தாக வைத்து, முழு பாரத்தையும் முன்னங்காலுக்கு மாற்றி, பந்தை கவர் திசையில் செலுத்தி ஆடுவார். அளவு குறையாமல் குட் லென்த்தாக இருந்தால் அதையும் கூட, வெட்டியோ, செலுத்தியோ தேர்ட்மேன் முதல் லாங் ஆஃப் வரை எங்கு வேண்டுமானாலும், நினைத்த மாதிரி அடிப்பார். மாறுதலுக்காக, மணிக்கட்டைத் திருப்பி, பந்தை மிட் விக்கெட் திசையில் flick செய்வார். என்னதான் செய்யப்போகிறார் என்று பந்து வீச்சாளருக்கும் தெரியாது, பந்து தடுப்பாளர்களுக்கும் புரியாது. கால் திசையில் எகிறி வரும் பந்தை ஹூக் செய்வதிலிருந்து, மடக்கி தரையோடு தட்டுவது, சுழற்பந்து வீச்சாளராக இருந்தால் பெருக்குவது, சற்றே நேராக வரும் பந்துகளை மிட் ஆனில் டிரைவ் செய்வது என்று டெண்டுல்கரின் வீச்சு பிரம்மாண்டமாக இருந்தது.

அதனால்தான் உலகம் முழுவதும் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் குவிந்தனர். இது வெறும் ரன்களைப் பெறுவதனாலோ, சதங்களை அடிப்பதனாலோ வருவதல்ல. ஆட்டத்தின் அழகில் மயங்குவதால் நிகழ்ந்தது.

ஆனால் இப்பொழுதைய நிலை என்ன?

டைமிங் சரியாக வருவதில்லை. பந்தின் வேகத்தை சரியாகக் கணிப்பதில்லை. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நுவான் ஸோய்சாவின் பந்தின் வேகத்தைச் சரியாகக் கணிக்க முடியாததால்தான் மிட் ஆஃப் திசையில் மேலே எழும்பி அடித்து ஆட்டமிழந்தார். கடந்த 20 ஒருநாள் போட்டிகளில், 19 முறை ஆட்டமிழந்துள்ளார். அதில் 9 முறை (47%) விக்கெட் கீப்பர் அல்லாத பந்து தடுப்பாளர்களால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்துள்ளார்.

இதற்கு முக்கியக் காரணம் பந்தை சரியாகக் கணிக்காமல் தனது ஷாட்டை முன்னதாகவே தேர்ந்தெடுத்து விளையாடுவதே.

டைமிங் சரியாக வராததால், முன்னெல்லாம் மிக அழகான ஷாட்களை அடித்து ஓட்டங்கள் எடுத்து வந்தாரோ, இப்பொழுது அதைத் தவிர்த்து பெர்செண்டேஜ் விளையாட்டாக விளையாடுகிறார். எப்படியாவது ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில், அழகான ஆட்டம் போய், இயந்திரத்தனமான ஆட்டம் நுழைந்துள்ளது. ஒருநாள் ஆட்டங்களின் சச்சின் டெண்டுல்கரின் ரன் எடுக்கும் ஸ்டிரைக் ரேட் – சந்திக்கும் 100 பந்துகளில் எத்தனை ஓட்டங்கள் அடிக்கிறார் என்னும் புள்ளி விவரம் – இப்பொழுது 100 பந்துகளுக்கு 86 ஓட்டங்களாக உள்ளது. கடந்த 100 ஆட்டங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தனது ஸ்டிரைக் ரேட்டை 100 பந்துகளுக்கு 86 ஓட்டங்களாகவே வைத்திருக்கிறார். ஆக அழகு குறைந்தாலும் அவர் ஒருநாள் போட்டிகளில் எடுக்கும் ரன்கள் குவிக்கும் வேகத்தில் ஒரு குறைவும் இல்லை. அத்துடன், கடந்த 100 ஆட்டங்களில் அவரது ஒருநாள் போட்டிகளுக்கான சராசரி 42.5இலிருந்து 44.8ஆக உயர்ந்துள்ளது. ஆக புள்ளிவிவரப்படி இந்திய அணிக்கான டெண்டுல்கரின் பங்களிப்பு கடந்த 100 போட்டிகளில் அதிகமாகித்தான் உள்ளது.

தனது அழகாக ஆடும் திறமை குறைகிறது என்று தெரிந்ததுமே டெண்டுல்கர் தனது பிறவியிலேயே கிடைத்த திறமையினால், தன் ஆட்டத்தை மாற்றி, ஓட்டங்களைக் குவிப்பதில் செய்திறனை வளர்த்துள்ளார். இது கிரிக்கெட் மீதான ஆர்வம் அப்படியே இருப்பதால்தான் நிகழ்கிறது. ஆர்வமில்லாத ஒருவர் தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.

எனவே முதலாவது குற்றச்சாட்டு – டெண்டுல்கரின் விளையாட்டில் ரசிக்கத்தக்க அம்சங்கள் குறைந்து வருகிறது – என்பது உண்மையாக இருக்கிறதே தவிர, இரண்டாவது குற்றச்சாட்டு – டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது – என்பது நியாயமான குற்றச்சாட்டு இல்லை.

License

Share This Book