25

கால்பந்து, கூடைப்பந்து போன்ற ஆட்டங்களில் அணியின் பயிற்சியாளர் (கோச்) மிக முக்கியமானவர். தன் அணியில் யார் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலிருந்து, எப்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் வீரரை வெளியே எடுத்துவிட்டு அவரிடத்தில் மாற்று வீரரை உள்ளே நுழைப்பது, எந்த நேரத்தில் டைம்-அவுட் கேட்பது என்பதைத் தீர்மானிப்பது, எதிரணியைத் தோற்கடிக்க எந்த மாதிரியான வியூகங்களை அமைப்பது என்பதை வெளியிலிருந்தே சைகைகளால் காண்பிப்பது, முழு ஆட்டத்திலும் முழுமையாக ஈடுபட்டிருப்பது, தோல்வியடந்தால் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது, ஜெயிப்பது போலிருந்தால் பக்கத்தில் இருப்பவரைக் கட்டிப் பிடித்து முத்தமிடுவது, இன்னும் சற்றே வெறி பிடித்தவராயிருந்தால் தன் அணியில் நட்சத்திர ஆட்டக்காரருக்கு ரெட் கார்டு கிடைத்துவிட்டால் நடுவரை அடித்துத் துவம்சம் செய்வது என்று இந்தப் பயிற்சியாளர்கள் ஆட்டத்தில் நீக்கமற நிறைந்துள்ளனர்.

ஆனால் சிறிதுகாலம் முன்னர் வரை கிரிக்கெட்டில் பயிற்சியாளர்கள் என்றால் யாரென்றே வெளியே பெயர் தெரியாமல் இருந்தது. அதுவும் இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

முதன்முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் ‘சூப்பர் கோச்’ என்று பெயர் பதித்தவர் பாப் வுல்மர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவில் பிறந்தவர்! இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடியவர். சுமாரான ஆட்டக்காரர்தான். 19 டெஸ்டு போட்டிகளில் விளையாடி சராசரியாக 33.09 ஓட்டங்கள் எடுத்தவர். இவர் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக 1994இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியில் பல திறமை மிக்க ஆட்டக்காரர்கள் இருந்தனர். ஆனால் யாரும் சூப்பர் ஹீரோக்கள் கிடையாது. அணித்தலைவர் ஹன்சி குரோன்யேவுடன் இணைந்து வுல்மர் தென்னாப்பிரிக்க அணியை ஒரு தலைசிறந்த ஆயுதப்படை போல மாற்றினார். கிரிக்கெட் உலகில் கணினியை முதன்முதலில் பயன்படுத்தியவர் இவர்தான். கணினியில் எதிரணி வீரர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு அதனை தன் வீரர்களிடம் காட்டிக்கொடுத்து, எதிராளிகளின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களை ஆடுகளத்தில் சீக்கிரம் அவுட்டாக வைத்தார். ஃபீல்டிங் என்பது மிக முக்கியமானது என்பதை நிலைநாட்டினார். அதற்கெனத் தனிப்பயிற்சி கொடுத்தார். இவரது காலத்தில்தான் தென்னாப்பிரிக்காவும், ஜாண்டி ரோட்ஸும் உலகப் பிரசித்தி பெற்ற பந்துத் தடுப்பாளர்களாக மின்னினர். இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அணிகளில் வார்விக்ஷயர் என்னும் அணியின் கோச்சாகவும் பணியாற்றி, சுமாரான ஒரு அணியை பல பரிசுக் கோப்பைகளைப் பெற வைத்தார்.

சில காலம் ஐசிசி இரண்டாம் கட்ட அணிகளின் (ICC associate member countries) தரத்தை உயர்த்துவதற்கான நிர்வாகியாக சில காலம் பணியாற்றினார். இப்பொழுது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  உலகிலேயே பாகிஸ்தானின் கோச்சாக இருப்பதைப் போல பாவப்பட்ட ஜென்மம் யாரும் கிடையாது.  பாகிஸ்தான் அணி மிகவும் திறமை வாய்ந்தது. ஆனால் இவர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து விளையாடுவது ஒருபொழுதும் கிடையாது. அவ்வப்போது இம்ரான் கான் போன்ற தலை சிறந்த வீரர்களின் அணித்தலைமையில் பிரகாசிப்பார்கள். மற்ற நேரமெல்லாம் குடுமிப்பிடி சண்டைதான். மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது, அவ்வப்போது யாராவது ஒருவர் மற்றவர்களெல்லாம் காசு வாங்கிக்கொண்டு ஆட்டத்தில் தோற்கிறார்கள் என்று புகார் சொல்வது, டீம் ஸ்பிரிட் என்றால் கிலோ என்ன விலையென்று கேட்பது – இதுதான் பாகிஸ்தான் அணி. கடந்த ஐந்து வருடங்களில் பத்து முறையாவது பயிற்சியாளரை மாற்றியிருப்பார்கள். அதில் ஜாவீத் மியாந்தாத் மட்டுமே நாலு முறையாவது மீண்டும் மீண்டும் வந்திருப்பார்.  ரிச்சர்ட் பைபஸ் (மற்றுமொரு தென்னாப்பிரிக்க சூப்பர் கோச்) இரண்டு முறை என்று. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடுத்து எப்பொழுது கலைக்கப்படும், யார் தலைவராக வருவார்கள் என்று யாருக்கும் தெரியாது. [அந்நாட்டின் பிரதம மந்திரிக்கே இதுதான் நிலைமை…] பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எப்பொழுது பார்த்தாலும் அணித்தேர்வில் தலையிட்டுக் கொண்டிருக்கும். இந்த அணியையும் வுல்மர் மாற்றிக் காட்டினாரென்றால் அவர் உண்மையிலேயே சூப்பர் கோச்தான்!

ஸ்ரீலங்காவில் பிறந்து, ஆஸ்திரேலியாவிற்காக விளையாடிய டாவ் வாட்மோர் மற்றுமொரு சூப்பர் கோச். இவர் வுல்மரை விட மோசமான கிரிக்கெட் வீரர். ஏழு டெஸ்டுகளில் சராசரியாக 22.53 ஓட்டங்கள் எடுத்தவர். ஸ்ரீலங்கா அணியின் கோச் ஆனார். அந்த அணியை தலைகீழாக மாற்றினார். உலகக் கோப்பை 1996ஐ வெல்லக் காரணமாயிருந்தார். மிக அருமையான பயிற்சியாளர். சுமாரான டீமை எப்படி உலக சாம்பியனாக்கினார் என்பது உலகையே அதிசயிக்க வைத்தது. இப்பொழுது பங்களாதேஷின் கோச்சாக உள்ளார். இங்கும் இவரது முழுத் திறமைக்குமான சவால் உள்ளது. பங்களாதேஷ் புது அணி. வரிசையாகத் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்திருக்கும் அணி. அங்கும் அரசியல்வாதிகளால் கிரிக்கெட்டில் குளறுபடிதான். வாட்மோரின் பணியை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் கோச் ஜான் பூஷணன் மேற்சொன்ன இரண்டு பேர்களையும் போன்றவரே. இவர் வாழ்க்கையில் ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடியதில்லை! ஆனால் 1999 முதல் ஆஸ்திரேலியாவின் கோச் பதவியில் இருந்து <b>ஸ்டீவன் வா</b> தலைமையிலான அணி உலக சாம்பியன்களாக இருக்க முக்கியக் காரணமானவர்.

இந்தியாவில் பயிற்சியாளர் நிலை எப்படி இருந்து வந்தது? இந்திய கிரிக்கெட் வாரியத்தில் உள்ள மற்ற பதவிகளைப் போல இங்கும் வட்டார சமரசங்களே நிகழ்ந்து வந்தன. போனமுறை வடக்கிலிருந்து ஓர் ஆள் வந்தாரா? அடுத்த வருடம் தெற்கோ, மேற்கோ ஒருவரைப் பிடிப்போம் என்றே நடந்து கொண்டனர். ஆனால் AC முத்தையா வாரியத் தலைவராக இருந்தபோது வெளியாள் ஒருவரை – திறமையான புரொஃபஷனல் ஒருவரை – கொண்டுவர முயற்சி செய்தனர். 2000த்தில் நியு ஜிலாந்தின் ஜான் ரைட்டை வேலைக்கு நியமித்தனர். அப்பொழுது இந்திய முன்னாள் வீரர்கள் பலருக்கு மிகவும் வருத்தம். இவ்வளவு பேர் இருக்கிறோம், வெளிநாட்டான் எதற்கு என்று குரலெழுப்ப ஆரம்பித்தனர். எங்கு சறுக்குவார், ஆளை ஒழித்துக் கட்டலாம் என்று அடுத்து வந்த நிர்வாகமும் முயன்றது. ஆனால் ஜான் ரைட் இதையெல்லாம் கண்டு மனம் சலிக்கவில்லை. கடமையைச் செய்வோம், பலனை எதிர்பாராது என்று கீதை வழியில் நடந்தார். சிறிதும் பொறுப்புணர்ச்சியும், கட்டுப்பாடும் இல்லாத இந்திய அணிக்கு  பொறுப்பினையும், தங்களால் வெல்ல முடியும் என்ற எண்ணத்தையும் கொண்டுவந்தார். பயிற்சியினைக் கடுமையாக்கினார். ஓர் அணியாக இணைந்து விளையாட வைத்தார்.

இன்று அத்தனை வீரர்களுமே ஜான் ரைட்டின் பங்களிப்பை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். புரளி பேசிய முன்னாள் “வீரர்கள்” வாயடைத்துப் போயுள்ளனர். இந்திய மாஜிக்கள் சற்றே தங்கள் உழைப்பை அதிகமாக்க வேண்டும். இந்தியாவில் திறமையான, சர்வதேச தரத்திலான பயிற்சியாளர்களே இல்லையா என்ற கேள்வி எழலாம். பதில் வருத்தம் தரக்கூடியது. இல்லை. சந்தீப் பாடில் கென்யாவின் பயிற்சியாளராக இருந்தவர். நிச்சயம், இப்பொழுதைக்கு இவர் பெயரைத்தான் முன்னால் வைக்க வேண்டும். கிருஷ் ஸ்ரீக்காந்த் இளம் அணியினரிடையே (U-19, India-A) மிகவும் பாராட்டைப் பெற்றவர். ஆனால் unorthodox. இப்பொழுது கோச்சிங்கில் முழு மூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இவர்கள் இருவர் பெயரைத் தவிர சொல்லிக்கொள்ளுமாறு வேறு எந்தப் பெயரும் இல்லவே இல்லை. மிகச் சிறந்த ஆட்டக்காரரான கபில்தேவ் – மிக மோசமான, உதவாக்கரை கோச்சும் கூட.

ஜான் ரைட்டுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழும்போது நாலைந்து இந்திய பயிற்சியாளர்கள் வரிசையில் வந்து நிற்பார்கள் என்று நம்புவோம். அப்படி யாரும் கிடைக்கவில்லையென்றால், வெட்கப்படாமல் வெளி நாட்டவர் யாரையாவது தேட வேண்டியதுதான்.

License

Share This Book