4

சவுரவ் கங்குலி மீது ஐசிசி மேட்ச் ரெஃபரீ கிளைவ் லாய்ட் கடுமையான குற்றச்சாட்டை வைத்து அவருக்கு தண்டனையும் வழங்கியுள்ளார். இப்பொழுது கங்குலி அதன்மீது மேல்முறையீடு செய்துள்ளார்.

நம்மில் பலருக்கு என்ன குற்றச்சாட்டு, ஏன் இந்த தண்டனை என்பது பற்றி ஒன்றும் புரிவதில்லை. அப்படி என்னதான் தவறு செய்து விட்டார் கங்குலி? அதற்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை நியாயமானதுதானா? இதுபற்றி நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.

நமக்கு வேண்டப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கொடுக்கப்படும்போதுதானே நாம் இதைப்பற்றி மேல் விவரங்கள் அறிந்துகொள்ள முற்படுகிறோம்?

ஐசிசி நடத்தை விதிகள்

கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படை எம்.சி.சி வழங்கியுள்ள கிரிக்கெட் சட்டங்கள் (“Laws of Cricket“). இந்த சட்டங்களைப் பின்பற்றித்தான் சர்வதேச கிரிக்கெட் ஆனாலும் சரி, தெருமுனை கிரிக்கெட் ஆட்டங்களானுலும் சரி, விளையாடப்படுகிறது. ஆனால் சில ஆட்டங்களின்போது சட்டங்களின் மீது சில மாறுதல்கள் (amendments) செய்துகொள்கிறோம். உதாரணமாக, தெருவில் விளையாடும்போது ஒரு குறிப்பிட்ட சுவற்றில் பட்டால் இரண்டு ரன்கள். ஹாங் காங் சிக்ஸஸ், கிரிக்கெட் மேக்ஸ், Twenty20 போன்ற சற்றே மாறுபட்ட கிரிக்கெட் ஆட்டங்கள் உண்டு.

ஐசிசி – அதாவது சர்வதேச கிரிக்கெட் வாரியம் – ஐந்துநாள் டெஸ்ட்கள் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைத் (ICC Standard Playing Conditions) தொகுத்து வழங்கியுள்ளது. இந்த விளையாட்டு விதிமுறைகளை, எம்.சி.சி கிரிக்கெட் சட்டங்களுடன் சேர்த்தே படிக்க வேண்டும். அத்துடன் கூட, விளையாட்டு வீரர்கள் சர்வதேச விளையாட்டுகளின் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்னும் நடத்தை விதிகளையும் வழங்கியுள்ளனர் (PDF கோப்புகளாக). இந்த நடத்தை விதிகளில் விளையாட்டு வீரர்கள், அணித்தலைவர் ஆகியோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்துகொண்டால் அது தவறு, என்னவிதமான தவறு என்று கருதப்படும், இந்தத் தவறுகளுக்கு என்ன தண்டனை என்று அனைத்து விலாவரியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

கங்குலியின் தவறுகள்

Ganguly22 ஜனவரி 2004இல் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி மெதுவாகப் பந்துவீசியது என்பதற்காக (1) நேரத்தை வீணடித்தார் (2) கிரிக்கெட் ஆட்டத்தின் உன்னதத்திற்கு எதிரான முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் கங்குலியின் மீது வைக்கப்பட்டன. இந்தக் குற்றம் லெவல் 2 என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தண்டனையாக கங்குலியின் அந்த ஆட்டத்திற்கான வருமானத்தின் 50% அபராதமாக வசூலிக்கப்பட்டது. அந்த ஆட்டத்திற்கான மேட்ச் ரெஃபரி கிளைவ் லாய்ட்.

நடத்தை விதிகள் 5 C (iii) படி

“ஓவர்கள் வீசும் விகிதம் டெஸ்ட் ஆட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்சத்தையும் விட ஐந்து ஓவர்கள் குறைவாக இருந்தாலும், ஒருநாள் ஆட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட குரைந்த பட்சத்தையும் விட இரண்டு ஓவர்கள் குறைவாக இருந்தாலும், நடத்தை விதிகள் (i), (ii) இல் குறிப்பிட்டுள்ள தண்டனைகளுக்கும் மேலாக, அணித்தலைவர் மீது நடத்தை விதிகள் C1 படி, நேரத்தை வீணடித்தார் என்றும், கிரிக்கெட் விளையாட்டின் உன்னதத்துக்கு மாறான முறையில் நடந்து கொண்டார் என்றும் குற்றம் சாட்டப்படும்.”

சரி, நடத்தை விதி C1 என்ன சொல்கிறது?

“விளையாட்டு வீரர்களும், அதிகாரிகளும் அனைத்து நேரங்களிலும் [உன்னதமான கிரிக்கெட்] விளையாட்டின் நோக்கங்களுக்குள்ளாகவும், கிரிக்கெட் சட்டங்களுக்கு உள்ளாகவும் நடந்துகொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் இதன்படி ஓரணி நடந்துகொள்ள அணித்தலைவர் முயல வேண்டும். (இந்த நடத்தையை மீறினால் என்ன தண்டனை என்பது CC 5.1இல் சொல்லப்பட்டுள்ளது.)”

குற்றங்களை 1, 2, 3, 4 என்று பல தரங்களில் பிரித்துள்ளனர். லெவல் 1 என்றால் சாதாரண குற்றம். லெவல் 4 என்றால் படுமோசமான குற்றம். 12 மாதத்துக்குள் இரண்டு லெவல் 1 குற்றங்கள் செய்தவர் லெவல் 2 குற்றவாளி என்று கருதப்படுவார். அதேபோல 12 மாதத்திற்குள் இரண்டு லெவல் 2 குற்றங்களைச் செய்தவர் லெவல் 3 குற்றவாளி என்று கருதப்படுவார்.

கங்குலி மீது கிரிக்கெட் ஆட்டத்தின் குறிக்கோள்களுக்கு எதிராக விளையாடினார், நியாயமற்ற முறையில் விளையாடினார் (unfair play) என்ற லெவல் 2 குற்றச்சாட்டு ஜனவரி 2004இல் வைக்கப்பட்டிருந்தது என்று பார்த்தோம்.

அடுத்த குற்றமும் அப்படியே. இரண்டு வாரங்களுக்கு முன் கொல்கொத்தாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓவர்களைக் காட்டிலும் குறைவாகப் பந்து வீசியதால் மீண்டும் அதே குற்றம் சாட்டப்பட்டார். இப்பொழுதும் மேட்ச் ரெஃபரி கிளைவ் லாய்ட். இதுவும் லெவல் 2 குற்றம்.

ஆனால் 12 மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நடந்த காரணத்தால் லெவல் 3 குற்றவாளியாக்கப்பட்டுள்ளார் கங்குலி. மற்ற லெவல் 3 குற்றங்கள் என்ன தெரியுமா?

(i) நடுவரையோ மேட்ச் ரெஃபரீயையோ வார்த்தைகளாலோ, செயல்களாலோ அச்சுறுத்துவது
(ii) பிற விளையாட்டு வீரர்களையோ, பார்வையாளர்களையோ, அதிகாரிகளையோ அடித்துவிடுவேன் என்று மிரட்டுவது
(iii) பிறரை அவர்களது இனம், மொழி, மதம், தோல் நிறம், பிறப்பு, பால் ஆகியவற்றைக் காரணம் காட்டி, வார்த்தைகளாலோ, சைகைகளாலோ கேவலப்படுத்துவது, மிரட்டுவது, அச்சுறுத்துவது ஆகியவை.

ஆக, ஐசிசி நடத்தை விதிகள் படி மேற்சொன்ன குற்றங்களைச் செய்தவர்களுக்கும், 12 மாதங்களுக்குள் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓவர்களைக் காட்டிலும் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசும் அணியின் அணித்தலைவராக இருப்பவருக்கும் கிடைக்கும் தண்டனை ஒரே மாதிரியானது. (இது தெரிந்திருந்தால், கிளைவ் லாய்டை நாலு தடவை சாத்தியிருக்கலாமே என்று கங்குலி நினைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அது லெவல் 4 குற்றமாகி, இரண்டு லெவல் 2 உடன் சேர்ந்து அவரை ஒரேயடியாக ஆட்டத்தை விட்டே நீக்கியிருப்பார்கள்!)

கங்குலிக்குக் கொடுத்த தண்டனை

சரி, லெவல் 3 குற்றத்துக்கான தண்டனை என்ன? கங்குலி டெஸ்ட் போட்டிகள் விளையாட இருப்பதால் இரண்டு டெஸ்ட்கள் விளையாட முடியாது என்று தண்டனை கொடுத்தார் லாய்ட். இதே கங்குலி ஒருநாள் போட்டிகள் பலவற்றிலும் விளையாடுவதாக இருந்தால் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது என்ற தண்டனை கிடைத்திருக்கும். அதாவது தண்டனையைப் பொருத்தவரையில் ஒரு டெஸ்ட் என்பது இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு சமம் என்று கருதப்படும்.

ஜனவரி 2003இல் ஆஸ்திரேலிய வீரர் டாரென் லெஹ்மான் இலங்கைக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் அவுட்டான பிற்பாடு டிரெஸ்ஸிங் ரூம் வந்து “கறுப்புக் கூ*” என்று இலங்கை அணி வீரர்களைத் திட்டியது இலங்கை ஆட்டக்காரர்கள் இருக்கும் அறை வரை கேட்டது. அப்பொழுது மேட்ச் ரெஃபரீ லெஹ்மான் மீது எந்தக் குற்றமும் சுமத்தவில்லை. அப்பொழுதைய மேட்ச் ரெஃபரீ யார் தெரியுமா? மதிப்புக்குரிய (கறுப்பின) கிளைவ் லாய்ட்தான்! ஆனால் இந்த பிரச்னை பெரிதாகி, ஐசிசி தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் (அவரும் ஓர் ஆஸ்திரேலியர்) உடனடியாக லெஹ்மான் மீது குற்றச்சாட்டை வைத்தார். இது லெவல் 3 குற்றம். விசாரித்த லாய்ட், லெஹ்மான் மீது ஐந்து ஒருநாள் போட்டிகள் விளையாடத் தடை விதித்தார்.

மேல்முறையீடு

கங்குலி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட இரண்டு ஆட்டங்களிலும் இயற்கையில் தொல்லை இருந்தது. சிட்னியில் நடந்த ஆட்டத்தில் மழை. ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டன. ஆனாலும் புல்லின் மீது இருந்த ஈரம் காரணமாக பந்தைத் துடைத்துத் துடைத்து வீசவேண்டியிருந்தது.

கொல்கொத்தாவிலும் பனி காரணமாக இரண்டாவதாகப் பந்துவீசிய இந்திய அணி பந்தைத் துடைத்துத் துடைத்து வீசவேண்டிய நிலைமை.

இதனால் தான் வேண்டுமென்றே (லெஹ்மான் அளவுக்கு) ஆட்டத்தின் கண்ணியத்தை மீறியதாகக் கூறுவது நியாயமாகாது என்று கங்குலி மேல்முறையிட்டுள்ளார். மேல்முறையீடு முடியும் வரை கங்குலி தொடர்ந்து விளையாடலாம் என்று அறிவித்த ஐசிசி, நியூசிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டிம் காஸில் என்பவரை மேல்முறையீட்டு நடுவராக நிர்ணயித்தது. கங்குலிக்கு ஆதரவாக மேற்கு வங்க முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தார்த்த ஷங்கர் ரே, இந்திய கிரிக்கெட் வாரிய வழக்கறிஞர் உஷாநாத் பானர்ஜி ஆகியோர் இன்று (25 நவம்பர் 2004) வாதிட்டனர். ஐசிசி வழக்கறிஞர் தென்னாப்பிரிக்காவின் ஊர்வசி நாயுடு, மேட்ச் ரெஃபரீ கிளைவ் லாய்ட் ஆகியோர் தம் தரப்பு வாதங்களை வைத்தனர்.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி டிம் காஸில் கங்குலி தரப்பு வாதங்களையும், கிளைவ் லாய்டின் பதிவுகளையும், ஆட்டத்தின் விடியோ படங்களையும் பார்த்து முடிவு செய்து, கங்குலிக்கு விதித்திருந்த தண்டனையை முழுவதுமாக ரத்து செய்துள்ளார்.

O

நடத்தை விதிகளுக்கான தண்டனையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்பதே என் கருத்து. லெஹ்மான் குற்றத்துக்கும், கங்குலியின் குற்றத்துக்கும் உள்ள வித்தியாசம் நம் அனைவருக்கும் புரியும்.

இருவருக்கும் ஒரே தண்டனை என்பது சரியில்லை. அதை ஐசிசியும் உணர்ந்துள்ளது நல்லதே. இதனால் கிளைவ் லாய்ட் செய்தது தவறு என்றாகி விடாது. லாய்ட் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறையிலிருந்து குற்றத்துக்கான தண்டனையைக் கொடுத்தார். மேல்முறையீட்டால்தான் இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்றப்பட வேண்டியது ஐசிசியின் நடத்தை விதிகளில், குற்றங்களுக்கான வரையறையும், குற்றங்களுக்கான தண்டனையும்.

License

Share This Book