28

இன்றைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் இருக்கிறது என்றதுமே பலருக்கு தலைவலி, வயிற்றுவலி, மற்ற சில உடல் உபாதைகள், இல்லாத பாட்டி, தாத்தாக்களின் உயிர்கள் ஊசலாடல் போன்றவை நிகழ்கின்றன. இதெல்லாம் தெரிந்திருந்தும் விடுமுறை கொடுக்கப்படுகிறது, அல்லது எடுக்கப்படுகிறது. சிலசமயம் அரசே மனமுவந்து ‘நம்மூர்ல மேட்சா, சரி விடு பொதுவிடுமுறை’ என்று கலக்குகிறார்கள்.

அப்புறம் என்ன? ஹாயாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் கிரிக்கெட் வரும் சானலுக்குப் போய் முழு மேட்சையும் பார்க்க வேண்டியதுதான்.

எப்பொழுதாவது இந்த தொலைக்காட்சி கவரேஜைப் பார்க்கும் போது அது எப்படி உங்களை வந்து சேருகிறது என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? அப்படியானால் என்னுடன் சிறிது வாருங்கள், ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம்.

மைதானத்தைச் சுற்றிய கேமராக்கள்

இப்பொழுதெல்லாம் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியைப் படம் பிடிக்க குறைந்தது 10-12 கேமராக்களையாவது உபயோகிக்கிறார்கள். இதில் குறைந்தது ஆறு கேமராக்களாவது மனிதர்களால் இயக்கப்படுபவை. மற்றவை இரண்டு பக்க மட்டையாளர்களின் அருகே இருக்கும் கிறீஸ் கோட்டைக் கண்காணிக்கப் பயன்படும். ரன் அவுட் சமயத்தில் இந்த கேமராக்கள் தரும் படங்கள் உபயோகமாயிருக்கும். இப்பொழுதெல்லாம் பந்தின் சுழற்சியை, அதிலுள்ள தையலின் கோணத்தை மிகத் துல்லியமாகக் காண்பிக்கும் சூப்பர் சுலோ மோஷன் கேமராவும் இதில் சேர்த்தி. நடு ஸ்டம்பில் இருக்கும் ஒரு கேமரா பூதாகாரமாக மட்டையாளரின் பின்புறத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கும். பந்து ஸ்டம்பில் பட்டு எகிறியதும் கேமராவும், வயரும் பிய்ந்து போய் ஆடுகளத்தின் புல் வெளியும், பழுப்பு நிறத்தில் உள்ள பிட்சும் காட்சியளிக்கும். இந்த ஸ்டம்ப் கேமராக்கள் வயர்லெஸ் முறையில் இயங்கும்.

ஆட்டக்களத்தின் இரண்டு பக்கங்களிலும் மனிதர்கள் இயக்கும் கேமராக்கள் இரண்டு இருக்கும். இவை தன் பக்கத்திலிருந்து ஓடிச்செல்லும் பந்து வீச்சாளரை பின்பக்கமாக முதலில் பின்தொடரும். எதிர்ப்பக்கமுள்ள கேமரா பந்துவீச்சாளர் பந்தை கையிலிருந்து விடுவிப்பதைக் கண்காணிக்கும். அதற்குள்ளாக மட்டையாளரை நோக்கியுள்ள கேமரா மட்டையாளர் நிற்பதைப் பிடிக்கும். பக்கவாட்டில் இரண்டு கேமராக்கள் தங்களுக்கு எதிர்ப்பக்கமுள்ள அரை வட்டத்தை ரோந்து சுற்றிக்கொண்டிருக்கும்.

மட்டையாளர் பந்தை அடித்ததும் அத்தனை கேமராக்களும் பந்தை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தும். அப்படியும் சில சமயம் எந்த கேமராவாலும் ஓடும் பந்தைப் பிடிக்க முடியாது. சிலமுறை மட்டையாளர் மிட் விக்கெட்டை நோக்கி அடிக்க யத்தனிப்பார். கேமரா இயக்குனர்கள் ஏமாறும் வகையில் பந்து விளிம்பில் பட்டு கவர் திசையில் வழிந்தோடும்.

இந்த கேமராக்களைத் தவிர ஒரு புண்ணியவான் கையில் ஒரு கேமராவை ஏந்திக்கொண்டு ஒவ்வொருமுறை அவுட்டாகும் ஆட்டக்காரர் வெளியே போகும்போது அவர் போகும் பாதையைக் காண்பித்து அவரை டிரெஸ்ஸிங் ரூம் வரை வழியனுப்பி விட்டு புதிதாக உள்ளே வரும் ஆட்டக்காரரை கிட்டத்தட்ட ஆடுகளத்தின் நடுவில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவார். இந்த கேமரா இயக்குனர் பின்னால் ஒரு எடுபிடி கையில் சுற்றிய வயர் பந்தும், ஒரு டிஷ் ஆண்டென்னாவுமாக வலம்வருவார்.

நேர்முக வர்ணனை அறை

இப்படி கேமராக்கள் எல்லாம் வெட்ட வெளியில், வியர்வையிலும், சூட்டிலும் கிடந்து அல்லாட, கழுத்தில் டையும், முகத்தில் சிரிப்புமாக பழம்பெரும் கிரிக்கெட் பிரபலங்கள், குளிர்பதன அறையில் உட்கார்ந்து கொண்டு நேர்முக வர்ணனை கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கண்முன் ஒரு டிவி மானிட்டர் இருக்கும். அதில் சுடச்சுட கிரிக்கெட் புரொடியூசர் அனுப்பும் படக்கலவை வந்துகொண்டிருக்கும். ஒரு நேரத்தில் இரண்டு வர்ணனையாளர் என்ற கணக்கில் மாறி மாறி வாயோடு ஒட்டும் மைக் மூலம் தங்கள் கிரிக்கெட் அறிவை பொதுமக்களிடத்தில் கொண்டுபோக வேண்டியது இவர்கள் பொறுப்பு. இந்த அறையில் வர்ணனையாளர் தவிர மற்ற சிலர் எப்பொழுதும் தொங்கிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு அவ்வப்போது காபி, டீ, பியர், தண்ணீர், சாண்ட்விச் இத்யாதிகளை எடுத்துக்கொடுக்க ஒரு பணியாளர் இருப்பார்.

ஸ்கோரிங், கிராபிக்ஸ்

ஆட்டத்தின் ஒவ்வொரு பந்தையும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக ஒரு (அல்லது இரு) புள்ளிவிவர நிபுணர் கணினி வழியாக ஸ்கோர் செய்வார். இந்த ஸ்கோர் பல காட்சிகளாக கணினித் திரையில் தெரிய வரும். புரொடியூசர் (இவரைப் பற்றிக் கடைசியில் பார்ப்போம்) ஒவ்வொரு படக்காட்சிக்கும் பொருத்தமான ஸ்கோர் காட்சியை இணைத்து வழங்குவார். திரையில் ஆக்ஷன் வரும்போது – அதாவது ஒரு பந்துவீச்சாளர் பந்துவீசும்போதும், மட்டையாளர் அடிக்கும்போதும், அல்லது ஓடி ஓட்டங்கள் பெறும்போதும் தொலைக்காட்சியில் கீழ்ப்பகுதியில் அணியின் மொத்த எண்ணிக்கை மட்டும் காட்சியளிக்கும். பந்துகளுக்கு இடையிலோ, அல்லது ஓவர்களுக்கு இடையிலோ, அவ்வப்பொது முழு பேட்டிங் ஸ்கோர்கார்டும் காணக்கிடைக்கும். அதைத்தவிர புதிதாக ஒரு மட்டையாளர் உள்ளே வரும்போதோ, அல்லது பந்துவீச்சாளர் பந்து வீசத் தொடங்கும் முன்னரோ, அந்த வீரர்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் திரையிலே தோன்று மறையுமல்லவா? அதையெல்லாம் ஒரு புரொடியூசர் கேட்கும்போது கணினித் திரைக்குக் கொண்டுவந்து தருவார் இந்த ஸ்கோரர்.

வெளிப்புறப் பட ஒளிபரப்பு வண்டி (OB van)

ஓபி வேன் என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் Outside Broadcasting Van தான் கிரிக்கெட் ஒளிபரப்பின் ஆதாரசுருதி. இங்குதான் நம் புரொடியூசர் உட்கார்ந்திருப்பார். இங்கு மூன்று வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும்.

1. அத்தனை கேமராக்கள், ஸ்கோரர் உருவாக்கும் ஸ்கோர் கணினிக் காட்சிகள், முந்தைய பல மேட்ச்களின் படத் துண்டுகள் ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் பல மானிட்டர்களில் காட்சியளிக்கும். புரொடியூசர் இந்தப் படங்களை இரண்டு விதமாகக் கலக்குவார் (mix). ஒன்றில் ஸ்கோர் கிராபிக்ஸ் எதுவும் இருக்காது. மற்றொன்றில் ஸ்கோர்/பிற கிராபிக்ஸ்கள் சேர்ந்திருக்கும். முதலாவதற்கு clean feed என்று பெயர். இரண்டாவதற்கு dirty feed என்று பெயர். [என் பத்திகளை கவனமாகப் படித்து வருவோர்களுக்கு, இதற்கு முன் டர்டி ஃபீட் என்னும் சொல்லை எந்தக் கட்டுரையில் பயன்படுத்தியிருந்தேன் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முதல் ஆசாமிக்கு Wisden Cricketer’s Almanack 2004 பரிசு. இந்தியாவிற்கு வெளியில் இருந்தால் மிக மெதுவாக ஊர்ந்து வரும் அஞ்சல் சேவையில்தான் அனுப்பி வைக்க முடியும்!]

சில தொலைக்காட்சி நிலையங்கள் கிளீன் ஃபீடை எடுத்துக் கொண்டு அதில் தங்களது சொந்த கிராபிக்ஸை சேர்த்து படம் காட்டும். மற்ற தொலைக்காட்சி நிலையங்கள் டர்டி ஃபீடை அப்படியே காட்டி விடும்.

2. மேற்படி படங்களுடன் வர்ணனையாளர்களின் குரல்கள், சில சமயம் ஸ்பெஷல் இசை ஆகியவை சேர்க்கப்படும்.

3. இப்படிக் கலவையாகும் ஒலி/ஒளிக் கோர்வைகள் செயற்கைக்கோள் வழியாக மேலேற்றப்படும். [uplinking]. மேலும் இவை விடியோவாக கேஸட்டுகளில் பதிக்கப்படும்.

புரொடியூசர் என்பவர்தான் இந்தக் கலக்கல் விளையாட்டின் நாயகர். அவர் சொல்படிதான் காட்சியமைப்பு இருக்கும். கேமரா யாரை கவனிக்க வேண்டும், எதில் கருத்தை செலுத்த வேண்டும் என்று விடாது கேமரா இயக்குனர்களின் காதுகளில் மாட்டியிருக்கும் இயர்ஃபோன் வழியாகக் கதைத்துக் கொண்டே இருப்பார் இவர்.

ஸ்டுடியோ விவகாரம்

இதற்கு மேலும் விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திலும் உள்ள ஸ்டுடியோவில் ஒரு நிகழ்ச்சி வழங்குனர் இருப்பார். அவர் அவ்வப்போது வந்து நம்மிடம் பேசிக்கொண்டிருப்பார். அதன்பிறகு இருக்கிறது விளம்பரங்கள். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் விளம்பரங்களை உள்ளே புகுத்துவது இந்த ஸ்டுடியோக்களில்தான். இப்பொழுதெல்லாம் உணவு இடைவேளை, இன்னிங்ஸ் இடைவேளையிலெல்லாம் ஸ்டுடியோவிலிருந்து இரண்டு மூன்று பிரபலங்கள் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார்கள். கூடத் தொட்டுக்கொள்ள ஒரு பெண்ணும் இருக்கிறார். நல்லதாக வர்ணனை செய்ய மட்டும் பெண்கள் யாரையும் பயன்படுத்திக் கொள்வதில்லை. அவ்வப்போது டாரோட் கார்டுகள் படிப்பது, கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடித்த சமையல் என்றெல்லாம் காட்டி கிரிக்கெட் ஒளிபரப்பை பல்சுவை விருந்தாகவே மாற்றிவிட்டனர்.

O

அடுத்தமுறை கிரிக்கெட் மேட்சை தொலைக்காட்சியில் பார்க்கும்போது யார் யார் என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை ஒருமுறை நினைத்துக்கொள்ளுங்கள். பின்னர் முழுக்க மறந்துவிடுங்கள். அதையே நினைத்துக்கொண்டிருந்தால் கிரிக்கெட்டில் கவனம் சிதறிப்போய்விடும்!

License

Share This Book