6

சென்ற வாரம் பந்துத் தடுப்பு வியூகங்கள் பற்றி ஓரளவுக்குப் பார்த்தோம். அதை மீண்டும் கவனிக்க முற்படும் முன்னர், எந்தப் பந்துகளில் எந்த மாதிரி அடிகளை அடிக்கலாம் என்று பார்ப்போம்.

கிரிக்கெட்டில் கண நேரத்தில் சில காரியங்கள் நடக்கின்றன. பந்து வீச்சாளர் பந்து வீச வரும்போதே அவர் என்னமாதிரியான பந்தை வீசுவார் என்பதை மட்டையாளர் முடிவு செய்திருப்பார். ஆனால் தேர்ச்சி பெற்ற பந்து வீச்சாளர் கடைசி நேரத்தில் சில மாறுதல்களைச் செய்யலாம். அதற்கு ஏற்றவாறு மட்டையாளர் தான் அடிக்க வந்ததை மாற்றிக்கொள்ள வேண்டும். பந்துகள் அடிபட்டால் எங்கு செல்லும் என்று பந்துத் தடுப்பு அணித்தலைவர் சில யூகங்களின் அடிப்படையில் தடுப்பு வியூகத்தை அமைத்திருப்பார். அதையும் மனதில் வைத்து மட்டையாளர் சில மாறுதல்களைச் செய்து சில அடிகளை அடிப்பார். அதைப் பந்துத் தடுப்பாளர் ஒருவர் பாய்ந்து தடுக்க முனைவார். இத்தனையும் கண நேரத்தில் நடக்கும்.

இந்தக் கண நேரத்தில் என்னென்ன அடிகளை அடிக்கலாம் என்று ஒரு மட்டையாளர் முடிவு செய்வார்? இந்த முடிவில் பாதி பழக்கத்தில் வருவது. அது ஒரு ஃபார்முலா படியானது. கிரிக்கெட் கோச்சிங்கில் இதை சொல்லிக்கொடுத்திருப்பர். அதற்கு மேல், ஒரு மட்டையாளர் தன் திறமையின் காரணமாகவும், உள்ளுணர்வின் காரணமாகவும் சில மாறுதல்களைச் செய்யலாம். அப்படித் திறமையாக விளையாடுபவர்தான் ஜீனியஸ். டெண்டுல்கர் போல! சேவாக் போல.

ஆஃப் திசையில் வரும் பந்துகளைப் பொதுவாக ஆஃப் திசையில்தான் அடிப்பது வழக்கம். ஆனால் இந்தப் பந்துகளை வளைத்து கால் திசையிலும் அடிக்கலாம். அதுபோலவே கால் திசையில் வரும் பந்துகளைக் கால் திசையில் மட்டும்தான் அடிக்க முடியும். இந்தப் பந்துகளை ஆஃப் திசையில் அடிப்பது மிகவும் கடினம்.

ஆஃப் திசை அடிகள்

ஸ்டியர் (Steer) என்னும் அடி மட்டையை நெடுக்காக (vertical), ஒரு கோணத்தில் வைத்து பந்தின் திசையை சற்றே மாற்றி ஸ்லிப் வழியாக அடிப்பது. ஒருநாள் போட்டிகளில் மிக அதிகமாக உபயோகமாகும் அடி இது. ஒருநாள் போட்டிகளில் முதல் சில ஓவர்களுக்குப் பிறகு ஸ்லிப்பில் யாரும் நிற்பது கிடையாது. அதனால் ஸ்லிப் வழியாக ஸ்டியர் செய்வது பாதுகாப்பானது. தர்ட்மேனில் நிற்பவர் பந்தைத் தடுத்து விடுவார். சாதாரணமாக ஒரு ரன்தான் கிடைக்கும். எப்பொழுதாவது நான்கு ரன்களும் கிடைக்கும். மட்டைக்கு வெகு அருகில் – அதாவது அகலம் அதிகம் இல்லாமல் வரும் பந்துகளில்தான் ஸ்டியர் செய்ய முடியும். ஸ்டியர் செய்ய முற்படும்போது மட்டையில் விளிம்பில் பட்டு கேட்ச் ஆவதும் உண்டு. விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப்பில் நிற்பவர்கள் கையில் கேட்ச் போகும். மட்டையை மேல்நோக்கி திருப்பி விடும்போது பந்து உயரப் பறந்து சென்று தர்ட்மேன் வரையில் கேட்ச் செல்லலாம்.

பந்து அளவு குறைந்தும், சற்று அகலத்துடன் வரும்போது வெட்டி ஆடவது எளிது. அகலம் என்றால் மட்டைக்குத் தள்ளி, ஆஃப் ஸ்டம்பிற்குத் தள்ளி விழுந்து வெளியே நகர்ந்து செல்லும் பந்து. வெட்டி ஆடுவது (cut) என்றால் பந்தின் பாதையை வெட்டி ஆடுவது. அதே போல வீசும் அளவு குறைந்து வரவேண்டும். மட்டையைக் குறுக்காக (horizontal) வைத்து பந்தின் பாதையில் பந்தைச் சந்தித்து பந்தின் திசையை மாற்றி அடிப்பது. இப்படி அடிக்கப்பட்ட பந்து பகுதிகள் 6, 5 ஆகிய இடங்களில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். (சென்ற வாரம் படத்தைப் பார்க்கவும்.) ஸ்டியர் செய்யும்போது பந்திற்கு அதிகமான வேகம் எதையும் கொடுப்பதில்லை. வழியை மற்றும் மாற்றுகிறோம். கட் செய்யும்போது பந்திற்கு அதிகமான வேகமும் கொடுத்து அடிக்கிறோம். ஸ்கொயர் கட் என்பது பந்தின் திசையை கிட்டத்தட்ட 90 டிகிரி கோணத்தை மாற்றி பாயிண்ட் திசையில் அடிப்பது. இந்த அடியை அடிக்கும்போது பொதுவாக பின்காலில் சென்றோ, அல்லது நின்ற இடத்தில் இருந்தோ அடிப்பார்கள். இந்த அடியின்போதும் சரியான கணிப்பு இல்லையென்றால் மேல் விளிம்பில் பட்டு கேட்சாகலாம். அல்லது உள் விளிம்பில் பட்டு ஸ்டம்பிலேயே விழுந்து அவுட்டாகலாம். ராகுல் திராவிட் பலமுறை இப்படி வெட்டி ஆடும்போது உள் விளிம்பில் பட்டு பவுல்ட் ஆவது உண்டு. இதற்கு முன், அசாருத்தீன் மிக அதிகமாக இப்படி அவுட்டாகியுள்ளார்.

குட் லென்த், அல்லது அளவு அதிகமாக வரும் பந்துகளை அடிக்க டிரைவ் (drive) என்னும் அடியைப் பயன்படுத்துவார்கள். இந்த அடிக்கு மட்டையை நெடுக்காக வைத்து பந்து வரும் திசையை நேராக எதிர்த்து பகுதிகள் 5, 4, 3 ஆகிய இடங்களுக்கு அடிப்பது. ஸ்கொயர் டிரைவ் என்பது ஸ்டியர் போன்று ஆனால் சற்று வேகம் செலுத்தி அடிப்பது. மட்டையை நேராக வைத்து, பந்தைச் சந்தித்து, கடைசி நேரத்தில் மட்டையைத் திருப்புவது ஸ்கொயர் டிரைவ். இது 6, 5 பகுதிகளுக்குச் செல்லும். முன் காலில் வந்து ஆடுவது. ஸ்டியர் என்பது நின்ற இடத்திலிருந்தே, அல்லது பின்காலில் சென்று ஆடுவது. டிரைவ் கவர் திசையின் சென்றால் கவர் டிரைவ் என்றும், மிட்-ஆஃப் திசையில் செல்லும்போது ஆஃப் டிரைவ் என்றும், நேராக, பந்துவீச்சாளருக்கு இருபக்கமும் சென்றால் ஸ்டிரெயிட் டிரைவ் என்றும், மிட்-ஆன் திசையில் சென்றால் ஆன்-டிரைவ் என்றும் அழைக்கப்படும்.

கால் திசை அடிகள்

நடு ஸ்டம்பில் அல்லது கால் திசையில் வரும் பந்துகளை கால் திசையில் அடிக்கலாம். இந்தியர்கள் கால் திசையில் நன்றாக அடித்து விளையாடுவார்கள் என்பது பொதுக்கருத்து. அசாருத்தீன், லக்ஷ்மண் போன்றவர்கள் கால்திசையில் மிக அழகாக விளையாடுபவர்கள். கால் திசையில் நல்ல அடிகள் அடிக்க மணிக்கட்டில் நல்ல திறன் வேண்டும். அல்லது உடம்பையே திருப்பி மட்டையை இழுத்து அடிக்க வேண்டும். ஆன் டிரைவ் அடிப்பதே எளிதானதல்ல.

அளவு குறைந்து, எழும்பி வரும் பந்துகளை பகுதி 2ல், புல் (pull) என்ற அடியினால் அடிக்கலாம். மட்டையைக் குறுக்காக வைத்து பந்தை வளைத்து தரையோடோ, அல்லது மேலாகவோ அடிப்பது. ஸ்கொயர் லெக் முதல் மிட்விக்கெட் வரை பந்து செல்லும். பந்து எழும்பி வராதபோது பிளிக் (flick) என்ற அடியால் அடிக்கலாம். மட்டையை நேராக பந்தின் பாதையில் சந்தித்து கடைசி நேரத்தில் மணிக்கட்டால் மட்டையை மிட்விக்கெட் திசை நோக்கித் திருப்பி அடிப்பது.

லெக் ஸ்டம்பின் திசையில் அல்லது அதற்கு வெளியே போகும் பந்துகள் அளவு அதிகமாக வரும்போது அந்தப் பந்தின் திசையைத் திருப்புவது டர்ன் (turn) என்னும் அடி. கிளான்ஸ் (glance) என்னும் அடியில் மட்டையைச் சாய்வாக வைத்து பந்து மட்டையின் மீது பட்டதும் விக்கெட் கீப்பருக்கு அருகாமையில் செல்வது.

லெக் ஸ்டம்பிற்கு வெளியே அளவு குறைந்து, எழும்பி வரும் பந்துகளை ஹூக் (hook) என்னும் அடியால் அடிக்கலாம். மட்டை நெடுக்காக கைப்பிடி கீழாகவும் மட்டை மேலாகவும் வைத்து பந்துக்குப் பின்னாலிருந்து பகுதி 2, 1 இல் அடிப்பது ஹூக். இந்த அடியில் பந்து தரையோடும் போகலாம், மேல்நோக்கியும் போகலாம். பந்து எந்தத் திசையில் வருகிறது என்பதைப் பொறுத்து புல் அல்லது ஹூக் அடிக்கலாம். பந்து ஆஃப் ஸ்டம்ப், நடு ஸ்டம்ப் வழியில் அளவு குறைந்து எழும்பி வந்தால் புல் செய்வதுதான் சரி. லெக் ஸ்டம்ப் அல்லது அதற்குத் தாண்டி வந்தால் ஹூக் செய்வதுதான் சரி.

உயரத்தூக்கி அடிப்பது

லாஃப்ட் (lofted shot) என்பது பந்தை உயரத்தூக்கி டிரைவ் செய்வது. கவர், மிட்-ஆஃப், லாங்-ஆப், லாங்-ஆன், மிட்-ஆன், மிட்-விக்கெட் திசைகளில் பந்தை லாஃப்டெட் டிரைவ் அடிக்கலாம். எந்த மாதிரியான பந்துத் தடுப்பு வியூகம் என்பதைப் பார்த்து மேலாக அடிப்பதா இல்லை தரையோடு அடிப்பதா என்று முடிவு செய்வார்கள். கையில் நல்ல வலு இருந்தால், எல்லைக்கோட்டைத் தாண்டி பந்து விழுமாறு அடிக்கமுடியும் என்றால் பந்துத்தடுப்பாளர் எங்கு நின்றாலும் கவலையின்றித் தூக்கி அடிக்கலாம்.

சேவாக் போன்றவர்கள் ஸ்கொயர் கட் அடிக்கும்போது கூட பந்தை உயரமாக அடித்து விளையாடுவார்கள். உலகக்கோப்பையின்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெண்டுல்கர் ஷோயப் அக்தரையும், சேவாக் வக்கார் யூனுஸையும் பாயிண்ட் திசையில் ஸ்கொயர் கட் சிக்ஸ் அடித்தது ஞாபகம் வருகிறதா?

O

கிட்டத்தட்ட இதுதான் கிரிக்கெட் ஆட்டத்தில் பொதுவாக அடித்து ஆடும் ஷாட்கள். பல மட்டையாளர்கள் இதை அடிப்பதா, அதை அடிப்பதா என்று குழம்பி கடைசி நேரத்தில் தவறு செய்துவிடுவார்கள். அதேபோல பந்தைத் தடுப்பதா அல்லது அடிப்பதா அல்லது மொத்தமாக விட்டுவிடுவதா என்பதிலும் குழம்பி ஆட்டத்தை இழக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாடும்போது எல்லாப் பந்துகளையும் அடிக்க வேண்டும் என்பதில்லை. பெர்செண்டேஜ் ஆட்டம் என்பார்கள். முக்கியமாக, டெஸ்ட் விளையாடும்போது ஒருசில பந்துகளை அடித்தால் அவுட்டாகும் வாய்ப்பு அதிகமாகும் என்று தெரிந்தால் அந்தப் பந்தை அடிக்காமல் விடுவதே சரியானது. பொதுவாகவே மட்டைக்கு வெகு அருகில், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வேகப்பந்து வீச்சாளர்கள் வீழும் பந்துகள் ஆபத்தானவை. சற்று கணிக்கத் தவறினாலும் மட்டையின் விளிம்பில் பட்டு கேட்ச் ஆகும். இந்தப் பந்துகளை முடிந்தவரை விட்டுவிடுவதே சரியானது. அதைப்போல லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் லெக் ஸ்டம்பிற்கு வெளியே அளவு அதிகமாக வீசப்படும் பந்துகளை காலால் தடுப்பதே சரியான முறை. அதை அடிக்கப்போய் அவுட்டாகத்தான் வாய்ப்புகள் அதிகம்.

அடித்தாடுவதைப் போலவே, பந்தைத் தடுத்தாடுவதிலும் நிறைய விஷயங்கள் உள்ளன. அதை வேறொரு சமயம் பார்க்கலாம்.

License

Share This Book