18

சேவாக், டெண்டுல்கர், கங்குலி, திராவிட், லக்ஷ்மண், யுவ்ராஜ் என்று யாருமே தொடர்ச்சியாக சோபிக்கவில்லை.

 

ஹாலிவுட் சினிமாவுக்கு ஆஸ்கார். அறிவியல், மருத்துவம், பொருளாதாரத் துறைகளுக்கு நோபல். இப்பொழுது ஐசிசி, கிரிக்கெட் வீரர்களுக்கென்று வருடாந்திர விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக ஆறு விருதுகள் உண்டு. இவற்றில் நான்கு தனி வீரர்களுக்கானவை: (1) வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் (2) சிறந்த ஒருநாள் போட்டி வீரர் (3) சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் (4) சிறந்த இளம் வீரர் (சிறந்த புதுமுகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்). மற்றும் இரண்டு அணிகளுக்கானவை. (1) சிறந்த டெஸ்ட் அணி (2) சிறந்த ஒருநாள் அணி.

இதைத் தவிர கவுரவ விருதுகளாக சிறந்த நடுவருக்கு ஒன்று, சமர்த்தான அணிக்கு ஒன்று (அதாவது குறைந்த அளவு மட்டும் தகராறு செய்த அணி!) என்று உண்டு.

இந்த விருதுகளுக்குப் பாத்திரமானவர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவர் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிச்சி பெனாட். தேர்வுக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் இயான் போதம், சுனில் காவஸ்கர், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் பாரி ரிச்சர்ட்ஸ்.

மேல் விவரங்களை அறிந்துகொள்ள http://www.icc-cricket.com/icc/news/icc_awards/main.html

என் தேர்வு:

சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்: ராஹுல் திராவிட் (இந்தியா)
சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்: ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
சிறந்த புதுமுகம்: இர்ஃபான் பதான் (இந்தியா)

வருடத்தின் சிறந்த ஆட்டக்காரர்: ஜாக் கால்லிஸ் (தென்னாப்பிரிக்கா)

சிறந்த டெஸ்ட் அணி: ஆஸ்திரேலியா; அடுத்தது இங்கிலாந்து
சிறந்த ஒருநாள் அணி: ஆஸ்திரேலியா; அடுத்தது இந்தியா

சிறந்த “சமர்த்தான அணி” – நியூசிலாந்து
சிறந்த நடுவர்: பில்லி பவுடன் (நியூசிலாந்து)

உங்கள் தேர்வு என்ன என்று சொல்லுங்களேன்?

O

மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட கென்யாவின் மாரிஸ் ஒடும்பே தடைசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு இருந்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். வழக்கை விசாரித்த ஐசிசி நியமித்த நீதிபதிகள் ஒடும்பே மீது குற்றம் இருப்பது உறுதியானதாகத் தீர்ப்பளித்தனர். இதனால் ஐசிசியின் நிபந்தனையின் பேரில் கென்யா ஒடும்பேவை ஐந்து வருடங்களுக்குத் தடை செய்துள்ளது. ஒடும்பேயின் இப்பொழுதைய வயது 35. இத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துபோயிற்று என்று சொல்லிவிடலாம்.

1996இல் இந்தியா-பாகிஸ்தான்-இலங்கையில் நடைபெற்ற உலகக்கோப்பையின் மேற்கிந்தியத் தீவுகள் அணியை கென்யா தோற்கடித்தது. யாருமே எதிர்பார்க்காத அந்த வெற்றியின் ஆட்ட நாயகன் ஒடும்பே. தனது வலது கை ஆஃப் ஸ்பின் பந்துவீச்சால் அந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் ஒடும்பே. கென்யாவின் 166 ஓட்டங்களைத் தாண்ட முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் வெறும் 93 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

O

அடுத்த வாரத்திலிருந்து இந்திய அணி மீண்டும் விளையாடத் துவங்குகிறது. முதலில் ஹாலந்தில் நடக்க இருக்கும் விடியோகான் கப். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடன் போட்டி போடும் இந்தியா இந்தக் கோப்பயை ஜெயிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று. தொடர்ந்து இங்கிலாந்துடன் மூன்று ஒருநாள் போட்டிகள் – நாட்வெஸ்ட் தொடர். உடனேயே ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை.

ஆசியக் கோப்பையின் போது இந்தியா பேட்டிங்கில் மிகவும் தடுமாறியது. சேவாக், டெண்டுல்கர், கங்குலி, திராவிட், லக்ஷ்மண், யுவ்ராஜ் என்று யாருமே தொடர்ச்சியாக சோபிக்கவில்லை. இந்த ஆறு பேரில்ஈரண்டு பேர் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருந்தால் போதுமானது. ஜாகீர் கான், ஆஷீஸ் நேஹ்ரா இருவரது ஃபிட்னெஸ் பற்றிய பிரச்சினைகளும் இருந்தன. இப்பொழுது ஜாகீர் கான் அணியில் இல்லை. பாலாஜியின் பந்துவீச்சு படு சுமாராக இருந்தது. முக்கியமாக பேட்டிங் சற்றே ஒழுங்கானால், தாக்குப் பிடித்துவிடலாம் என்று தோன்றுகிறது. எதிரணியில் பாகிஸ்தான் எப்பொழுதும் போல குழப்பமான நிலையில்தான் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு விளையாட வருவது நமக்கு வசதியாக இருக்கும்.

நான் ஏற்கனவே திராவிட் விக்கெட் கீப்பிங் பற்றிய எனது கருத்தைச் சொல்லியிருக்கிறேன். திராவிடின் முழுத் திறமையும் பேட்டிங்கில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அதைத் தவிர திராவிட் மோசமான விக்கெட் கீப்பரும் கூட. அவரால் தவறு செய்ய முடியாமல் இருக்க முடியாது. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் விளையாட வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை. அவர் இந்திய அணியுடன் சுற்ற இருப்பதால் பீஹாரின் மஹேந்திர சிங் தோனி என்பவருக்கு கென்யாவில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட தோனி அடித்து விளாசுகிறார். இப்படி நன்கு பேட்டிங் செய்யக்கூடிய விக்கெட் கீப்பர்கள் வருவது நமக்கு நல்லதுதான்.

O

கென்யாவில் நடக்கும் ‘A’ அணிகளுக்கான போட்டியில் இந்தியா கோப்பையைத் தட்டிச் செல்லும் என்று Venugopal Raoதோன்றுகிறது. இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது. இதுவரை ஒரேயொரு ஆட்டத்தில்தான் இந்தியா கென்யாவிடம் தோல்வியுற்றது. யார் இறுதிப்போட்டிக்கு வந்தாலும் இந்தியா-A எளிதாக ஜெயித்து விடும் என்று தோன்றுகிறது.

Gautham Gambirஇந்த ஆட்டங்களில் இந்தியாவின் எதிர்கால டீம்தான் விளையாடுகிறது. பேட்டிங்கில் கவுதம் கம்பீர், மஹேந்திர சிங் தோனி, வேணுகோபால ராவ், அம்பாடி ராயுடு ஆகியோர் விளையாடுகின்றனர். தமிழகத்தின் ஸ்ரீதரன் ஸ்ரீராமும் இருக்கிறார் – ஆனால் அவர் கடந்த காலம், எதிர்காலம் அல்ல. பந்துவீச்சில் அவிஷ்கார் சால்வி, அமித் பண்டாரி, ஷிப் சங்கர் பால் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள், ரமேஷ் பொவார், சாயிராஜ் பஹுதுலே என சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இது மிக நல்ல, வலுவான அணி.

திராவிட், டெண்டுல்கர், கங்குலி, லக்ஷ்மண் ஆகியோர் ரிடயர் ஆகும்போது வேணுகோபால ராவ்,Ambati Rayudu அம்பாடி ராயுடு, கவுதம் கம்பீர் ஆகியோர் நிச்சயமாக அந்த இடத்தை நிரப்புவார்கள். சேவாக் துவக்க ஆட்டத்திலிருந்து இறங்கி மிடில் ஆர்டருக்கு வருவார். இவருடன் யுவ்ராஜ் சிங், வேணுகோபால ராவ், அம்பாடி ராயுடு ஆகியோர் சேர்ந்தால் கச்சிதமான மிடில் ஆர்டர் கிடைக்கும். கவுதம் கம்பீர் அல்லது விநாயக் மானே துவக்க ஆட்டத்திற்குப் போவார்கள். ஆகாஷ் சோப்ரா மற்றொரு துவக்க ஆட்டக்காரர்.

இந்தியாவின் பேட்டிங் எதிர்காலம் பற்றி நாம் அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை. பவுலிங்கில்தான் நாம் அதிகமாக முன்னேற வேண்டும்.

O

முடிக்கும்போது ஒரு கேள்வி. இப்பொழுதைக்கு கிரிக்கெட் விளையாடுவோர்களில் யார் சிறந்த ஆல் ரவுண்டர்? நான் ஆண்டிரூ ஃபிளிண்டாஃப் என்கிறேன். ஜாக் கால்லிஸ் அடுத்த இடம்தான். உங்கள் சாய்ஸ் என்ன?

License

Share This Book