20

ஆசியக் கோப்பை முடிந்துவிட்டது. இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணங்கள்?

– மூன்று மாதம் விளையாடததால் துருப்பிடித்துப்போன கைகள்
– ஜாகீர் கானுக்கு மீண்டும் காள் சுளுக்கு, இடுப்பு தசைப் பிடிப்பு என்று ஏதாவது ஒன்று
– திராவிட்தான் நமக்கு கீப்பராக இருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான யோசனை
– பாலாஜிக்கு திருஷ்டி. பந்து கால் திசையில் மட்டும்தான் போவேன் என்கிறது

இவைதான் என்றில்லை. பல குட்டிக் குட்டி விஷயங்களும் சேர்த்துதான். நம் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் இள ரத்தங்களைப் பாய்ச்ச வேண்டும். மொஹம்மத் காயிஃப் மேல் எப்பொழுதும் பிரெஷர் இருக்க வேண்டும் என்பதற்காக தினேஷ் மோங்கியா, ஹேமங் பதானி ஆகியோரை அருகிலேயே வைத்திருக்கலாம். செய்யாமல் விட்டு விட்டார்கள். லக்ஷ்மணை ஒருநாள் போட்டிகளிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று தோன்றுகிறது. அவர் ஃபீல்டிங்கிலும் சோடையாக இருக்கிறார், வேகமாக கிரீஸ் இடையே ஓடி ஒரு ரன்கள் சேகரிப்பதில் தடவுகிறார். வயசாகிக் கொண்டே போகிறது. இந்த முறை சேவாக், யுவராஜ், கங்குலி, லக்ஷ்மண், காயிஃப் ஐவரும் தடவி விட்டனர். திராவிடும் உச்சத்தை எட்டவில்லை. டெண்டுல்கர் ஒருவர்தான் முடிந்தவரை நின்றாடினார். ஆனால் அவரும் முழு ஃபார்மில் இல்லை.

ஒருவழியாக நாம் போனவாரம் சொன்னதை செலக்டர்கள் கேட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. நாம் கேட்டுக்கொண்டபடியே இன்று அறிவித்த அணியில் பார்திவ் படேலைத் தூக்கி விட்டு தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கைக் கொண்டு வந்துள்ளனர். உடனடியாக விளையாடுவாரா என்று தெரியவில்லை. அடுத்த சில ஆட்டங்களுக்கு திராவிடே விக்கெட் கீப்பராக இருப்பார் என நினைக்கிறேன். தைரியமாக ஹாலந்தில் நடக்கும் போட்டிகளில் தினேஷ் கார்த்திகை விளையாட வைக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால் பேட்டிங்கில் வேறெந்த மாற்றமும் இல்லை. தினேஷ் மோங்கியா இல்லை. லக்ஷ்மண், காயிஃப் உள்ளனர். ரோஹன் கவாஸ்கர் மீண்டும் உள்ளே வந்துள்ளார். இதனால் அதிகமாக எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஜாகீர் கானை தூக்கி விட்டு அஜித் அகர்கார் உள்ளே வந்துள்ளார். பாலாஜி மீண்டும் ஒழுங்காகப் பந்து வீசுவார் என்று எதிர்பார்ப்போம்.

சுழற்பந்து வீச்சில் எந்த மாறுதலும் இல்லை. அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இருவரும் உள்ளனர். அனில் கும்ப்ளேயை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது. உண்மையில் அந்த நேரம் தாண்டி விட்டது என்றே தோன்றுகிறது. இப்பொழுதைக்கு நம் அணியின் முன்னணி ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்தான். அப்படி இருக்கும்போது முரளி கார்த்திக், அமித் மிஷ்ரா ஆகியோரை உடனடியாகக் களத்தில் இறக்கி விடாமல் நாள்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது.

Sachin, Ganguly, Dravidஎன் பயமெல்லாம் அடுத்த உலகக் கோப்பை மீதுதான். இப்பொழுதிருந்தே 2007ஐ மனதில் வைத்திருந்து அணியைத் தீர்மானிக்க வேண்டும். 2007இல் லக்ஷ்மண் விளையாடப்போவதில்லை. கங்குலி, டெண்டுல்கர், திராவிட் விளையாடுவர், ஆனால் தங்கள் கடைசிக் காலத்தில் இருப்பர். சேவாகும், யுவ்ராஜ் சிங்கும் தான் நம் முன்னணி மட்டையாளர்களாக இருப்பர். அப்படியானால் இன்னமும் இரண்டு நல்ல மட்டையாளர்கள் தேவை. அவர்களைக் கண்டுபிடிக்க நாம் புதிதாக 6 பேர்களையாவது சோதனையாகக் களமிறக்க வேண்டும்.

பந்துவீச்சில், கும்ப்ளே அதுவரை தாக்குப் பிடிக்கப் போவதில்லை. எனவே உடனடியாக ஹர்பஜனுக்கு ஜோடியாக இன்னமும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைக் கண்டறிய வேண்டும். அதற்கென நான்கு-ஐந்து பேர்களை தொடர்ச்சியாக களத்தில் இறக்கி பரிசோதிக்க வேண்டும்.

வேகப்பந்து வீச்சில், ஜாகீர் கான் மீது அதிக நம்பிக்கை இல்லை. பதான், பாலாஜி, அகர்கார், நேஹ்ரா என நால்வரும் 2007 வரை விளையாடுவார்கள் எனத் தோன்றுகிறது. முனாஃப் படேலை இப்பொழுதே உள்ளே கொண்டுவர வேண்டும். இன்னமும் ஒரு வேகப்பந்து வீச்சாளரைத் தயார் செய்ய அடுத்து மூன்று-நான்கு பேர்களைக் கண்டறிய வேண்டும்.

நிச்சயமாக திராவிட் விக்கெட் கீப்பராக இருக்கக் கூடாது. தினேஷ் கார்த்திக், பார்திவ் படேல், இன்னமும் ஒரு விக்கெட் கீப்பர் ஆகியோருக்கிடையில் யாராவது ஒருவரைப் பிடித்தாக வேண்டும்.

ஆக நம் செலக்ஷன் கமிட்டிக்கு நிறைய வேலைகள் உள்ளன. அதைச் சரியாகச் செய்வதுபோலத் தெரியவில்லை.

License

Share This Book