2

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்று கைப்பற்றியது. இந்தத் தொடரின் நாயகன் இர்ஃபான் பதான். நான்கு இன்னிங்ஸில் 18 விக்கெட்டுகள் பெற்று இந்திய வெற்றிக்கு முதன்மைக் காரணமாக இருந்தவர் பதான்.

இந்தத் தொடரில்தான் பதான் முதல் முறையாக ஓர் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளோ, அதற்கு மேலோ பெறுகிறார். அதுவும் அடுத்தடுத்து மூன்று இன்னிங்ஸில். அதைப்போலவே இந்தத் தொடரில்தான் ஒரே டெஸ்டில் பத்து விக்கெட்டுகளுக்கு மேல் பெறுவதும்.

எப்படி ஒரு மட்டையாளருக்கு அரை சதம், சதம், அதற்கும் மேல் என்று பெறுவது முக்கியமான மைல் கல்லோ, அதைப்போன்றே ஓர் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுக்கு மேல் பெறுவதும்.

இத்தனைக்கும் பதான் முதன்முதலாக சர்த்தேச கிரிக்கெட் விளையாட வந்து சரியாக ஒருவருடம்தான் நிறைவு பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் முதல் டெஸ்டை விளையாடிய பதான் மறக்க முடியாத யார்க்கர் ஒன்றில் கில்கிறிஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். காற்றிலே உள்நோக்கி வளைந்து சரேலென இறங்கிய பந்தில் கில்கிறிஸ்ட் முழுவதுமாக ஏமாந்து போனார். முன்வந்து தடுத்தோ, அடித்தோ ஆட முற்பட்டார் கில்கிறிஸ்ட். ஆனால் பந்து மட்டைக்கும், கால் காப்புக்கும் இடையேயான சிறிய இடைவெளியில் புகுந்து ஸ்டம்பைக் கழட்டியது.

புதிதாக விளையாட வரும் எந்தவொரு இளைஞருக்கும் பெருத்த உற்சாகத்தைக் கொடுக்கும் விக்கெட் இது. கில்கிறிஸ்ட் பந்துவீச்சாளர்களின் வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கக் கூடியவர். அழ வைத்து விடுவார். அவரை, அதுவும் இந்த வகையில் அவுட்டாக்குவது மாபெரும் பலத்தைத் தரக்கூடியது.

அதையடுத்து வந்த பாகிஸ்தான் தொடரில், பதான் தன் முதிர்ச்சியை மட்டையடியில் காட்டினார். இந்தியா தோற்ற லாஹூர் டெஸ்டில் பதான், யுவ்ராஜ் சிங் இருவரும்தான் தலைநிமிர்ந்து நிற்க முடிந்தது. தன் பெற்றோர்கள் பார்க்க, தன் அரை சதத்தை எட்ட முயற்சி செய்து அவுட்டானார் பதான். பின்னர் பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மற்றொரு தோற்ற டெஸ்டில் அரை சதத்தைப் பெற்றார்.

ஆனால் பந்துவீச்சில் அவ்வப்போது பெறும் ஓரிரு விக்கெட்டுகள் பதான் அதிக தூரம் போகவேண்டியதைத் தெரிவித்தது. ஒரு தேர்ச்சி பெற்ற பந்துவீச்சாளர் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். ஒரு விக்கெட் எடுத்துவிட்டால் உடனே புதிதாக உள்ளே வந்திருப்பவரை அச்சுறுத்தி, அவரையும் அவுட் செய்யப் பார்ப்பார். ஒரு விக்கெட் எடுத்தாலே போதும் என்ற மனநிலை அவரிடம் எப்போதும் இருக்காது.

அதற்கு, ஒரு பந்து வீச்சாளர்க்கு முக்கியத் தேவை சில விக்கெட் எடுக்கும் பந்துகள். பதான் இடது கை மிதவேகப் பந்துவீச்சாளர். இவரது பெரும்பான்மைப் பந்துகள் வலது கை மட்டையாளருக்கு உள்நோக்கி ஸ்விங் ஆகும். துல்லியமாக வீசினால் முதல் சில ஓவர்களுக்குள் – மட்டையாளர்கள் பந்தைச் சரியாக கவனிக்கத் தொடங்கும் முன்னர் – எல்.பி.டபிள்யூ வகையில் விக்கெட் கிடைக்க ஏதுவான பந்து. இலங்கையின் சமிந்தா வாஸ் இவ்வாறு வீசுவதில் சமர்த்தர். பதானும் வாஸைப் போலவே துல்லியமாக வீசுகிறார். பங்களாதேஷ் போன்ற அணிகளின் திறமை குறைவான ஆட்டக்காரர்கள் இந்தப் பந்தில் நிறையவே தடுமாறுகின்றனர். பதானுக்கு நிறைய எல்.பி.டபிள்யூக்களும் கிடைக்கின்றன.

பதானின் கூட்டாளி ஜாகீர் கான், பதான் அளவுக்கு பந்துகளை உள்ளே கொண்டுவருவதில்லை. இவரது பந்துகள் பெரும்பான்மையும் அவர் வீசும் கோணத்தினாலேயே வெளியே போகக்கூடியவை. அதற்கு மேல் வெளியே போகும் ஸ்விங் வேறு. எப்பொழுதாவது, கஷ்டப்பட்டுதான் பந்துகளை உள்ளே கொண்டுவருவார். பதான் அளவுக்கு ஜாகீர் கான் பந்தில் துல்லியம் கிடையாது. இங்கும் அங்குமாக நிறையவே அள்ளித் தெளிப்பார். மேலும் பதான் அளவுக்கு கிரீஸ் கட்டுப்பாடும் கிடையாது ஜாகீர் கானுக்கு. இதனால் எக்கச்சக்க நோபால்களும் உண்டு.

பதான் பந்துவீச்சில் சில குறைபாடுகளும் உண்டு. ஒன்று வேகம் சற்று குறைவாக இருப்பது. கிட்டத்தட்ட மெக்ராத் வீசும் வேகத்தில்தான் பதான் வீசுகிறார் என்றாலும், தன் இளமையில் மெக்ராத் இன்னமும் வேகமாக வீசியவர். பதானும் இப்பொழுது சற்று வேகத்தைக் கூட்டும் முயற்சியில் – துல்லியத்தை சற்றும் குறைக்காமல் – ஈடுபடவேண்டும். மெக்ராத் தன் உயரத்தால், பந்தை அபரிமிதமாக எழும்ப வைப்பார். பதான், தன் உயரக் குறைவால் பந்தை ஓங்கிக் குத்துவதன் மூலம்தான் இதனைச் செய்யமுடியும்.

சமீபத்தில் பெர்த் ஆடுகளத்தில் மெக்ராத் பாகிஸ்தான் அணிக்கெதிராக அற்புதமாகப் பந்துவீசி ஒரே இன்னிங்ஸில் எட்டு விக்கெட் பெற்றார். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகச்சிறந்த பந்துவீச்சு இது. பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதுதான். ஆனால் மெக்ராத்தின் பந்துகளை விட கில்லெஸ்பி, காஸ்பரோவிச் இருவருமே வேகமாக வீசக்கூடியவர்கள். இருந்தும் மெக்ராத்தான் விக்கெட்டுகளைப் பெற்றார். எனவே வேகம் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. மெக்ராத்தின் திறமையே ஓவர் மாற்றி ஓவர் ஒரே இடத்தில் – ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீசி, பந்தை சற்றே வெளியே கொண்டுபோவது. விடாது, மீண்டும் மீண்டும் அதையே வீசிக்கொண்டிருப்பது.

மெக்ராத்திடமிருந்து பதான் கற்றுக்கொள்ள வேண்டியதும் இதைத்தான். துல்லியமாக, ஒரே இடத்தில், மீண்டும் மீண்டும் பந்தை வீசிக்கொண்டே இருக்க வேண்டும். தேவையற்ற சோதனைகள் வேண்டாம். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, நல்ல அளவில் வீசிக்கொண்டே இருக்க வேண்டும்.

முடிந்தவரை பந்துகளை வெளியே செல்லுமாறு ஸ்விங் செய்ய வேண்டும். நடு நடுவே, எப்போதாவது மட்டும், பந்துகளை உள்ளே ஸ்விங் செய்யவேண்டும். எப்பொழுதாவது ஒரு பவுன்சர், ஒரு யார்க்கர். அவ்வளவுதான்.

அதைச் செய்தால் இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்னும் பட்டத்தைப் பெறுவதில் கஷ்டமேயில்லை. கபில் தேவுக்குப் பிறகு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் பதான். கபில் தேவ் சென்ற தூரம் வரையாவது இவரும் செல்வார் என்று எதிர்பார்ப்போம்!

License

Share This Book