23

ஷேன் வார்ன், முரளிதரன் இருவரும் ஆளுக்கு 527 விக்கெட்டுகளுடன் உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்களாக உச்சத்தில் நிற்கிறார்கள். வார்னுக்கு 35 வயது. முரளிதரனுக்கு 32 வயது. வெறும் புள்ளிவிவரங்களை வைத்து ஒப்பிடுகையில், முரளிதரனே மேலாக நிற்கிறார். முரளிதரன் தனது விக்கெட்டுகளை வார்னை விட குறைந்த டெஸ்டுகளில் எடுத்துள்ளார். (22 டெஸ்டுகள் வித்தியாசம்). முரளிதரன் தானெடுத்த விக்கெட்டுகளுக்கு ஈடாகக் கொடுத்த சராசரி ஓட்டங்கள் 22.76; வார்னுடையது கொஞ்சம் அதிகமாக 25.47. முரளிதரன் ஒவ்வொரு 58.2 பந்துகளுக்குப் பிறகும் ஒரு விக்கெட்டை எடுக்கிறார். வார்னுக்கு 59.7 பந்துகள் ஆகின்றன. விட்டு விடலாம், வெறும் 1.5 பந்துகள்தான் வித்தியாசம்!

புள்ளிவிவரங்களை விட்டுவிடுவோம். அவற்றிலிருந்து கிடைக்கும் கதைகள் குறைவு. இவ்விருவரது விளையாட்டிலும் எத்தனையோ ஆச்சரியங்கள், அதிசயங்கள். இருவர் மீதும் சில குற்றச்சாட்டுகள்.

ஷேன் வார்ன் ஆஸ்திரேலியாவிற்காக விளையாட வந்தபோது அவரது எதிர்காலம் பிரகாசமாகத் தெரியவில்லை. அவர் முதலில் எதிர்கொண்டது சிட்னியில் இந்திய அணியை. இந்திய அணி அப்படியொன்றும் 1991-92இல் பிரகாசிக்கவில்லையென்றாலும் அந்த டெஸ்டில் ரவி ஷாஸ்திரி இரட்டை சதமடித்தார்; சச்சின் டெண்டுல்கர் ஒரு சதமடித்தார். வார்னின் பந்துவீச்சில் புதிதாக ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. பந்துவீசிய ஒரே இன்னிங்ஸில் 150 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை (ஷாஸ்திரியுடையது) எடுத்திருந்தார். முரளிதரன் வார்னுக்குப் பிறகு விளையாட வந்தவர். தன் முதல் டெஸ்டில் கொழும்பில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். வார்ன் அளவுக்கு மோசமாக இல்லாமல், முதல் டெஸ்டில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். ஆனால் வார்ன்தான் முதலில் வெளியே தெரிந்தார். தனது 12வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும்போது லெக் ஸ்டம்பிற்கு வெளியே அவர் வீசிய பந்து சுழன்று மைக் கேட்டிங்கின் மிடில் ஸ்டம்பைத் தட்டியது. அதுபோன்ற ஒரு பந்தை இங்கிலாந்து வீரர்கள் பார்த்து பல மகாமகங்கள் ஆகியிருந்தன. அன்றிலிருந்து இன்றுவரை இங்கிலாந்து கிரிக்கெட் எழுத்தாளர்கள் வார்னின் புகழ்பாடுவதிலேயே கழித்து வருகின்றனர்.

அந்த டெஸ்டைத் தொடர்ந்தே வார்ன் விக்கெட்டுகளை கூடை கூடையாகக் குவிக்கத் தொடங்கினார். ஷேன் வார்ன் ஒரு லெக் ஸ்பின்னர். ஆசாரமான லெக் ஸ்பின்னர். லெக் ஸ்பின் பந்துவீச்சு எப்படி இருக்க வேண்டுமோ, அதை இலக்கணசுத்தமாக வீசுபவர். வலது மணிக்கட்டை சரியாகத் திருப்பி, பந்தை கால்திசையிலிருந்து ஆஃப் திசைக்குத் திருப்புவார். நடுநடுவே அதே ஆக்ஷனில் பந்தை வீசி, விரல்கள் மூலம் கடைசி நேரத்தில் பந்தை கூக்ளியாகவும் போடுவார். கூக்ளியை விட இவர் வீசும் ஃபிளிப்பர் – வேகமாக, அளவு குறைந்து விழுந்து சரேலென நேராக ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்தை லாகவமாய் வீசுவதில் வல்லவர். பந்து வீச்சின்போது, மெதுவாக நாலடி நடந்து விக்கெட்டின் மேல் கை வருமாறு கடைசி நேரத்தில் தோள்பட்டையும், மணிக்கட்டும் சேர்ந்து இயங்க பந்தை வீசுவார்.

சிலசமயம் எதுவுமே தன் அணிக்கு சாதகமாக இயங்காத போது (அதாவது சச்சின் டெண்டுல்கர் எதிர் முனையில் பேட்டிங் செய்யும்போது!) வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வந்து பந்தை லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே எறிந்து மட்டையாளரின் பிருஷ்டத்தில் படுமாறு வீசுவார். அப்பொழுதெல்லாம் ஒரு தேர்ச்சி பெற்ற நாதசுரக் கலைஞனின் வாத்தியத்தை எடுத்து அதனால் தரையைக் கூட்டச்சொல்வதைப் போன்ற தோற்றம் இருக்கும்.

ஷேன் வார்ன் தன் உச்சத்தை எட்டிய அதே நேரத்தில் உலகில் இந்தியர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் ஸ்பின் பவுலிங்கை விளையாடுவதில் கொஞ்ச நஞ்சமுள்ள திறமையும் காணாமல் போயிருந்தது. நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணியில் உள்ள அனைவரும் வார்னைக் கண்டதும் பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போயினர். பாகிஸ்தான் அணி கூட தடுமாறியது. இந்தியா மட்டும்தான் வார்னை உச்சியிலிருந்து கீழே தட்டி வைத்திருந்தது.

முரளிதரனின் தொடக்கம் வார்னுடையதைப் போல இல்லை. ஆனாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டுதான் இருந்தார் முரளி. வார்ன் எந்த அளவிற்கு இலக்கணசுத்தமாக லெக் ஸ்பின் வீசினாரோ, அதற்கு நேர்மாறாக, யாருமே இதுவரை வீசாத ஒரு ஆக்ஷனில் ஆஃப் ஸ்பின் பந்து வீசுபவர் முரளி. இதனால் இன்றுவரை பந்தை ‘எறிகிறார்’ என்ற அவப்பெயரும் வாங்கியுள்ளவர். சாதாரணமாக வலது கை ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் விரல்களால் சுழல்பந்து வீசும்போது, முரளி உள்ளங்கை மேல்நோக்கி நிற்க வலது மணிக்கட்டைச் சுழற்றி ஆஃப் ஸ்பின் போடுகிறார். வழவழக் கண்ணாடித்தரையிலும் பந்தை சுழலச் செய்யக்கூடியவர் முரளிதரன்.

ஷேன் வார்னின் லெக் ஸ்பின்னர்களைப் போலவே முரளியின் ஆஃப் பிரேக்குகளும் அக்கச்சக்கமாக சுழலக் கூடியது. இந்தியா தவிர பிற அணிகளை நிலைகுலையச் செய்பவை. இந்தியா கூட கடந்த சில டெஸ்டுகளில் முரளியை சரியாகச் சந்திக்கவில்லை. நாளாக நாளாக முரளியின் பந்துவீச்சில் திறமை கூடுகிறது. வார்னின் பந்துவீச்சு அப்படியில்லை.

வார்ன் பந்துவீசும்போது அவர் முகத்தில் ஒரு மறைந்த சிரிப்பு இருக்கும். முரளி பந்துவீசும்போது அவர் கண்களில் ஒருவித வெறிகலந்த வேகம் இருக்கும். முகத்தின் தீவிரம் பயத்தைக் கொடுக்கும். பந்துத் தடுப்பாளர் பந்தைக் கோட்டைவிடும்போது முரளிதரன் கோபத்தில் சத்தம்போடுவது தெளிவாகத் தெரியும். வார்ன் பந்துவீசும்போது அப்படியிருக்காது.

முரளி எந்த அளவிற்கு கிரிக்கெட் மைதானத்தில் சர்ச்சையைக் கிளப்புகிறாரோ, அந்த அளவிற்கு பொதுவாழ்க்கையில் அமைதியாக இருப்பவர். வார்னோ, கிரிக்கெட் மைதானத்தில் குற்றம் சொல்ல முடியாதவர். பொதுவாழ்க்கையில் பில் கிளிண்டனுக்கு அடுத்தபடி. இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடப்போனபோது அங்கு ஒரு பாரில் இருந்த பெண்மணியை விடாது துரத்தி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறவாட முயன்றார் என்று செய்தி பரவியது. மன்னிப்பு கேட்டார் வார்ன். பின்னர் தடைசெய்யப்பட்ட டயூரெடிக் (diuretic) மருந்து உடலில் இருந்ததால் உலகக்கோப்பை 2003இல் விளையாடாமல் வெளியேறினார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஒருவருடம் தடை செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட நேரத்தில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் வார்ன் தனக்கு ஆபாசமான செய்திகளை மொபைல் தொலைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பினார் என்று குற்றம் சாட்டினார். ஆஸ்திரேலியப் பெண் ஒருவரும் வார்ன் தன்னிடம் அசிங்கமாக நடக்க முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டினார். ஆனால் இதுபோன்ற நிலையிலிருந்து மீண்டு இப்பொழுது மீண்டும் கிரிக்கெட்டில் முழுதாக ஈடுபட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தொடங்கி விட்டார்.

முரளிதரனுக்கு ஏற்பட்ட கஷ்டமெல்லாம் ஆஸ்திரேலியா தொடர்பானது. இரண்டு ஆட்டங்களில் முரளி பந்தை ‘எறிந்தார்’ என்று ஆஸ்திரேலிய நடுவர்கள் அவரது பந்துகளை நிராகரித்தனர். அதைத் தொடர்ந்து பிரச்சனை சர்வதேச அளவில் பெரிதானது. பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஐசிசி முரளியின் ‘தூஸ்ரா’ என்னும் பந்தை வீசக்கூடாது, அது சட்டபூர்வமானதில்லை என்று அறிவித்தது. அது நடக்கும்போதே ஆஸ்திரேலியாவின் பிரதமர் முரளியின் பந்துகள் சட்டபூர்வமானதில்லை என்று தான் நம்புவதாக அறிவிக்க, முரளி ஆஸ்திரேலியாவுக்குத் தான் செல்லமாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.

சென்றிருந்தால், இன்று வார்னும், முரளியும் ஒரே விக்கெட் எண்ணிக்கையில் உலகின் உச்சியில் இருந்திருக்க மாட்டார்கள்.

இனி வரும் நாட்களில், ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாண்டிக்கொண்டிருப்பார்கள். முதலில் வார்ன்தான் கிரிக்கெட்டிலிருந்து விலகுவார் என்று தோன்றுகிறது. அப்படியென்றால், இருவருக்குமான போட்டியில், முரளி நிச்சயமாக வென்று விடுவார். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், ஷேன் வார்னே தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக நிலைநிற்பார்.

License

Share This Book