19

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 டெஸ்ட் விக்கெட்டுகளைப் பெற்றிருந்தார்.

கிரிக்கெட் பற்றி பாசத்துடன் பேசும் பெரிசுகளைக் கேட்டுப் பாருங்கள். தங்கள் நாள்களில் ‘ஸ்பின் குவார்டெட்’ – பேடி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கடராகவன் என்னென்ன செய்தனர் என்று பேசித் தள்ளுவார்கள். இந்த நால்வரும் நான்கு வெவ்வேறு வகை ஸ்பின் பவுலர்கள். இதில் பிஷன் சிங் பேடி இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இன்னமும் பெரிசுகளிடம் போய் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களைப் பற்றிப் பேசினால் வினு மன்கட் என்பார்கள். பேடி தாண்டி இந்தப் பக்கம் வந்தால் திலீப் தோஷி, ரவி ஷாஸ்திரி, மனிந்தர் சிங், வெங்கடபதி ராஜு, ரகுராம் பட், நிலேஷ் குல்கர்னி, முரளி கார்த்திக்.

இந்தியாவிற்காக டெஸ்டே விளையாடாத, ஆனால் மிகச்சிறந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் என்று பத்மாகர் ஷிவால்கர், ராஜிந்தர் கோயல் என்ற இருவரைக் குறிப்பிடுவர்.

இருவரும் சம காலத்தவர்கள். ஷிவால்கர் மும்பை அணிக்காகவும், மஹாராஷ்டிர அணிக்காகவும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடியவர். ராஜிந்தர் கோயல் ஹரியானாவுக்காக விளையாடினார். கோயல் 156 ஃபர்ஸ்ட்-கிளாஸ் போட்டிகளில் விளையாடி 750 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஷிவால்கர் 124 போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஆனால் இருவருக்கும் ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இவர்கள் இருவரும் விளையாடிய அதே நேரத்தில்தான் பிஷன் சிங் பேடியும் விளையாடிக் கொண்டிருந்தார். மூன்று பேருமே இடது கை விரல் சுழற்பந்து வீச்சாளர்கள். இதற்கு ஆங்கிலத்தில் slow left arm orthodox என்று சொல்வர். இந்த வகைப் பந்து வீச்சாளர்கள் வீசுவது வலது கை ஆஃப் ஸ்பின் பந்துவீசுபவர்களின் கண்ணாடி பிம்பமாக இருக்காது. வலது கை ஆஃப் ஸ்பின் வீசுபவர்கள் சாதாரணமாக front-on actionஇல், வீசும் கை விக்கெட்டுக்கு மேல் வர வீசுவார்கள். இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் பொதுவாக side-on actionஇல் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வீசுவார்கள். அத்துடன் நடுவரை நன்கு பின்னுக்குத் தள்ளி நிற்க வைத்து விட்டு ஸ்டம்பிற்கும் நடுவருக்கும் இடையே ஓடிவந்து வீசுவார்கள்.

பேடி, ஷிவால்கர், கோயல் போன்றோர் பந்து வீசும்போது பந்தை மிக மெதுவாக, காற்றில் மிதக்க (flight) வைப்பார்கள். விரல்களால் பந்தை அழுத்திப் பிடித்து சுழற்றுவார்கள். சுழன்று போகும் பந்திலிருந்து மாற்றாக arm ball எனப்படும் கையோடு உள்ளே வரும் பந்தை வீசுவார்கள். இத்தகைய ஆர்ம் பந்து சற்றே வேகமாக வீசப்படுவதும் கூட. மற்றபடி இவர்கள் அதிகமாக நம்பியிருப்பது ஃபிளைட்தான்.

இந்த ஸ்பின்னர்கள் ஓட்டங்கள் கொடுப்பதைப் பற்றி சிறிதும் அஞ்சியது கிடையாது. மட்டையாளர்களை மயக்கி, ஏமாற்றி, ஃபிளைட்டினால் அவர்களைத் தோற்கடித்து விக்கெட்டுகளை எடுப்பதையே பெரிதும் விரும்பினார்கள்.

சரி, பேடி எத்தனை விக்கெட்டுகள் எடுத்தார் தெரியுமா? 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 டெஸ்ட் விக்கெட்டுகளைப் பெற்றிருந்தார். அத்துடன் 370 ஃபர்ஸ்ட்-கிளாஸ் மேட்ச்களில் விளையாடி 1560 விக்கெட்டுகளைப் பெற்றிருந்தார்!! பேடி இந்தியாவில் விளையாடியது மட்டுமின்றி இங்கிலாந்து கவுண்டிகளில் நார்தாம்டன்ஷயருக்காகவும் விளையாடினார்.

பேடி ஓய்வெடுத்ததும்தான் திலீப் தோஷிக்கு வாய்ப்பு கிடைத்தது. தோஷி, பேடி அளவிற்கு பந்தைப் பேச வைத்தது கிடையாது. தோஷியின் கடைசிக் காலத்தில் உள்ளே வந்த ரவி ஷாஸ்திரி, பின் அவரைத் தொடர்ந்து வந்த மனிந்தர் சிங் ஆகியோரும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களே. ரவி ஷாஸ்திரி மிகக் குறைந்த திறமைபடைத்தவர். சிறிது காலத்திலேயே தன் பவுலிங்கினால் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து படிப்படியாக துவக்க ஆட்டக்காரராக ஒரு பேட்ஸ்மனாக உருமாறிவிட்டார். மனிந்தர் சிங் ஆனால் மிக அருமையான ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர். அவரது உச்சத்தில் அவர் கிட்டத்தட்ட பேடி போல பந்து வீசுகிறார் என்று புகழப்பட்டார்.

திடீரென அடுத்தடுத்து வந்த லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனும், நரேந்தர் ஹிர்வானியும் வலதுகை லெக் ஸ்பின் பந்து வீச்சில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தனர். ஆனால் வந்த வேகத்திலேயே தங்கள் முதல் மேட்சை அணிக்காக ஜெயித்துக் கொடுத்து பின் ஒரேயடியாகக் காணாமல் போய்விட்டனர். மனிந்தர் சிங் மட்டும் சளைக்காமல் ஒருபுறம் விளையாடிக் கொண்டிருந்தார். மனிந்தருக்குப் பின் நிலைத்து நின்று விளையாடிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹைதராபாதின் வெங்கடபதி ராஜு.

அப்பொழுதுதான் அஸாருதீன் கேப்டனாகவும், அஜித் வடேகர் கோச்சாகவும் இருந்தனர். இந்தியாவில் நடக்கும் ஆட்டங்கள் அனைத்தையும் கொத்திப்போட்ட மண்தரையிலே நடத்தி மூன்று ஸ்பின்னர்களை வைத்தே வென்று வந்தனர். அனில் கும்ப்ளேதான் முன்னணி ஸ்பின்னர். அவருக்கு சரியான துணை ராஜு. சில ஆட்டங்களில் ஆஃப் ஸ்பின்னர் ராஜேஷ் சவுஹான் விளையாடி வந்தார்.

ராஜுவுக்குப் பின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை. ரகுராம் பட் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தார். மும்பையின் நிலேஷ் குல்கர்னியும் ஏமாற்றம்தான்.

ஆச்சரியம் தரத்தக்க வகையில் இப்பொழுதைக்கு நியுசிலாந்தின் டேனியல் வெட்டோரிதான் உலகின் முன்னணி இடதுகை சுழற்பந்து வீச்சாளர். அவரை அடுத்து இங்கிலாந்தின் ஆஷ்லி கைல்ஸ் கடந்த சில மேட்ச்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி மேலே வந்திருக்கிறார் என்றாலும் இவருக்கும் வெட்டோரிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத இட வித்தியாசம். வெட்டோரி அருமையாக பந்தை காற்றில் மிதக்க வைப்பவர். இந்தியாவின் முன்னணி ட்வீக்கர் (tweaker) முரளி கார்த்திக். ஆனால் இவர் விடாது ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். மிகச் சீக்கிரமாக ஒரு ஸ்பின் இடம் (அனில் கும்ப்ளே) காலியாக இருக்கிறது. விடாமுயற்சி இருந்தால் அந்த இடம் கார்த்திக் உடையதுதான்.

நான் வினு மன்கட் விளையாடிப் பார்த்தது கிடையாது. எனக்குத் தெரிந்தவரை இந்தியாவின் மிகச்சிறந்த இடதுகைச் சுழற்பந்து வீரர் பிஷன் சிங் பேடிதான். ஷிவால்கர், கோயல் இரண்டு பேரும் கிட்டத்தட்ட இந்த குவாலிடியில்தான் பந்து வீசியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. அதற்கடுத்து மனிந்தர் சிங்தான். கார்த்திக் மிகவும் ஃபிளாட்டாக – உயரமும், ஃபிளைட்டும் கொடுக்காமல் – வீசுகிறார் என்பது நிபுணர்களின் குற்றச்சாட்டு. அதற்கு முக்கியக் காரணம் ஒருநாள் போட்டிகள்தான். ரன்கள் தடுப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட எந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளரும் சிறப்பான பந்துவீச்சை வீசிவிட முடியாது. டெஸ்ட் மேட்ச்களைப் பொருத்தவரை விக்கெட்டுகளைப் பெறுவதுதான் முக்கியமான குறிக்கோள். அங்கு ஒருவரது துல்லியமான பந்துவீச்சும், ஃபிளைட்டில் கொண்டுவரும் மாறுபாடுமே முக்கியம். கார்த்திக் இதைத்தான் சரியாகப் பழக வேண்டும்.

License

Share This Book