10

இந்தியாவில் பல கோடி பேர் தொலைக்காட்சியில் மட்டுமே கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கின்றனர். தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், நேரடியாக மைதானம் சென்று அரங்கத்தில் உட்கார்ந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

Chepauk Stadiumதொலைக்காட்சியில் பார்ப்பது என்பது உரித்த வாழைப்பழத்தை வாயில் ஒருவர் ஊட்டிவிடுவதைப் போன்றது. மைதானத்தில் போய் கிரிக்கெட் பார்க்கும்போது பார்வையாளர் சற்று அதிகமாக முயற்சி செய்யவேண்டும். கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். சிந்தனையைச் சிதறவிடக் கூடாது. இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற நிலையில் எதற்காக ஒருவர் மைதானம் போய் ஆட்டத்தைப்பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். உரித்த வாழைப்பழம் எல்லாம் சரி, ஆனால் நல்ல கனிந்த, உங்கள் சுவைக்கு ஏற்றதான வாழைப்பழத்தை உங்களால்தானே தேர்ந்தெடுக்க முடியும்? நேரடியாக ஆட்டத்தைப் பார்க்கையில் தொலைக்காட்சியில் காண்பிக்காத பலவற்றைக் காண முடியும். அதே சமயம் தொலைக்காட்சியின் பல சவுகரியங்கள் நேரடியாக ஆட்டத்தைப் பார்ப்பதில் இருக்காது. நல்ல அரங்கங்களாக இருந்தால் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு டிவி இருக்கும். அல்லது அரங்கில் பெரிய திரையில் அவ்வப்போது ரீப்ளே காண்பிக்கும். பெங்களூரில் பெரிய திரை கிடையாது, சென்னையில் உண்டு.

அரங்கில் இருக்கும்போது நம்மால் முழு பந்துத் தடுப்பு வியூகத்தையும் பார்க்க முடியும். யார் யார் எங்கே நிற்கிறார்கள், சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதைப் போல அணித்தலைவர் யாரை எங்கு நகர்த்துகிறார், பந்து எங்கு ஓடுகிறது, மட்டையாளர்கள் எவ்வளவு ரன்களை எடுக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். இடது கை மட்டையாளரும், வலது கை மட்டையாளரும் ஒரு ரன்னடித்து இடம் மாறும் போது தடுப்பு வியூகம் எப்படி மாறுகிறது என்று பார்க்க முடியும்.

தடுப்பு வியூகத்தில் எங்கெல்லாம் இடைவெளி இருக்கிறது என்பதை முழுமையாகப் பார்க்க முடியும். பந்து வீச்சாளர் பந்தை வீசியவுடனே மட்டையாளர் இடைவெளியைப் பார்த்து அடிப்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். பந்தை அவ்வாறு அடித்தவுடன் பந்து தடுபடுமா, இல்லை நான்காகுமா என்று கவனிக்க முடியும். பந்தை உயரத் தூக்கி அடிக்கும்போது பந்து சிக்ஸ் ஆகுமா இல்லை உள்ளேயே விழுந்துவிடுமா என்பதைக் கணிக்க முடியும்.

இது எதையும் டிவியில் பார்க்கும்போது கண்டறிய முடியாது.

டிவியில் பார்க்கும்போது எந்த முனையிலிருந்து வீச்சாளர் பந்து வீசினாலும் ஒரே மாதிரியாகத்தான் தெரியும். டிவியில், முதலில் பந்துவீச்சாளர் ஓடிவருவது, வீசுவது ஆகியவை காண்பிக்கப்பட்டு, காட்சி சட்டென்று மாறி அடுத்து மட்டையாளர் காண்பிக்கப்படுவார். அதன்பின் அவரது ஷாட் காண்பிக்கப்படும். பின் பந்துத் தடுப்பாளர்களும், பந்தும் ஒரே ஃபிரேமுக்குள் வருமாறு கேமரா கோணம் மாறும். நடுவில் மட்டையாளர்கள் ரன் பெறுவது வேண்டுமானால் காண்பிக்கப்படும் (மிகவும் நெருக்கமான ரன், ரன் அவுட் வாய்ப்புள்ளது என்றால்).

ஓவர் முடிவில் இந்தியத் தொலைக்காட்சியென்றால் சதா விளம்பரங்கள். பலமுறை அடுத்த ஓவரில் முதல் பந்து காணாமல் போய்விடும். அதில் விக்கெட் விழுந்து தொலைத்தால், உடனே அந்த விக்கெட்டைக் கூட காட்டாமல் மேலும் விளம்பரங்கள் – இப்படி.

ஆனாலும் தொலைக்காட்சியில் சில விஷயங்கள் மிகவும் உபயோகமானவை. சூப்பர் ஸ்லோ மோஷன் கேமராக்கள், ஸ்டம்ப் கேமரா, ரீப்ளே, ஹாவ்க் ஐ, எல்.பி.டபிள்யூ மார்க்கர், கேட்சா, இல்லையா என்பதைக் கண்டறிய பெரிதாக்கிக் காண்பிக்கும் வசதி போன்றவை மிகவும் உபயோகமானதே. அதனால்தான் அரங்கில் அமர்ந்து கொண்டு, பக்கத்தில் டிவியையும் வைத்திருந்தால் வசதியாக இருக்கும்.

அரங்கில் இடம் கிடைப்பது அடுத்த விஷயம். எங்கு உட்காருவது? எங்கு வேண்டுமானாலும் சீட் கிடைக்கும் என்றால் முடிந்தவரை பந்துவீச்சாளர்க்கு நேர் பின்னே உட்காருங்கள். முடிந்தவரை கான்கிரீட் தூண்கள் இல்லாத இடமாகப் பார்த்து உட்கார வேண்டும். மைதானத்தில் பெரிய திரை இருந்தால், அதைப் பார்க்கக்கூடிய திசையில் சீட் பிடியுங்கள். பொதுவாக நல்லதொரு எலெக்டிரானிக் ஸ்கோர்போர்டும், ஒரு சாதா ஸ்கோர்போர்டும் இருக்கும். எலெக்டிரானிக் ஸ்கோர்போர்டில்தான் அதிகபட்ச விவரங்கள் கிடைக்கும். சென்னை சேப்பாக்கத்தில் பெரிய திரையில் ஸ்கோர், ரீப்ளே என எல்லாம் கிடைக்கும்.

அவ்வப்போது ஏதானும் ஒரு மேட்சாவது மிட் விக்கெட் (கவர்) திசையில் உட்கார்ந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

மற்ற பல விஷயங்களும் உண்டு. முக்கியமாக பந்து எங்கே போகிறது என்பதைக் கவனிக்க பலரும் தவற விடுவார்கள். டிவியாக இருந்தால் டிவி கேமரா பந்தைத் துரத்தி உங்களுக்குக் காண்பிக்கும். அரங்கத்தில் பந்து எங்கே போகிறது என்பதை நீங்கள்தான் கவனிக்க வேண்டும். அதற்கு சிறிது அனுபவம் வேண்டும். (இதை வைத்துத்தான் டிவி கேமராமேன் செய்கிறார்!) பந்து வீசியவுடன் மட்டையாளர் எப்படி நகருகிறார், மட்டையை வீசுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். உடனடியாக உங்கள் மூளை, பந்து எங்கு சென்றிருக்கமுடியும் என்பதை ஓரளவுக்குக் கணிக்க வேண்டும். அதற்கு கிரிக்கெட் விளையாட்டு உங்களுக்கு நன்கு புரிபட வேண்டும். உங்களையே பேட்ஸ்மேனாக நினைத்து அந்த அடியை நீங்கள் கண நேரத்தில் அடித்துப் பார்க்க வேண்டும். பின்பு அந்தத் திசையில் கவனிக்க வேண்டும். பந்து சரியானபடி அடிபட்டிருந்தால் அங்குதான் செல்லும். ஆனால் தவறாக அடிபட்டிருந்தால் சற்றே விலகிச் செல்லும். அல்லது முழுவதுமாக எதிர்த் திசையிலும் செல்லலாம். (மிட்விக்கெட்டில் அடிக்கப்போய் கவருக்குச் செல்லும்!) மேற்கொண்டு உதவ பீல்டர்கள் எந்தத் திசைகளில் ஓடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவும்.

ஒருநாள் போட்டிகளாக இருந்தால், இந்திய அரங்கம் என்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். சத்தம் தாங்க முடியாது. உங்களைச் சுற்றி இருக்கும் பார்வையாளர்கள் பொதுவாக கிரிக்கெட் பற்றிய அறிவு குறைந்தவர்களாக, அல்லது முழுவதுமாக இல்லாதவர்களாக இருப்பார்கள். இந்திய வீரர்கள் அசிங்கமாக ஆடி, ஒரு ரன் எடுத்தாலும் கூட்டம் ஆர்ப்பரிக்கும். எதிரணி வீரர்கள் அருமையான நான்கு ரன்களைப் பெற்றாலும் அமைதியாக இருப்பார்கள். பந்து தரையில் பட்டு தடுப்பாளரிடம் சென்றால் சுற்றி உள்ளவர்கள் தீவிரமாக அப்பீல் செய்வார்கள். அதையெல்லாம் கண்டு/கேட்டு கடுப்பாகக் கூடாது. அவர்கள் பாவம், மன்னித்து விடுங்கள்.

நடு நடுவில் ‘சாக் தே’, ‘சத் ஸ்ரீ அகால்’, ‘ஜீதேகா பாயி ஜீதேகா’ போன்ற பல பாடல்கள் வரும். காலி தண்ணீர் பாட்டில்களை வைத்து சேரில் தட தடவென அடித்து சத்தம் செய்வார்கள். இந்தியா இரண்டு மூன்று விக்கெட்டுகளைச் சேர்ந்த மாதிரி எடுத்தால் எல்லோரும் எழுந்து நின்று அடுத்த பந்துகளைப் பார்க்க முடியாதவாறு செய்வார்கள்.

முடிந்தவரை கிரிக்கெட் பார்க்க வேண்டுமானால் ஒருநாள் போட்டிகளுக்குப் போகாதீர்கள். (போகலாம், ஆனால் கிரிக்கெட்டை ரசிக்க முடியாது. மற்றவர்களோடு சேர்ந்து குதித்து ஆடி சந்தோஷமாகவோ, அல்லது சோகமாகவோ திரும்பி வரலாம்!) டெஸ்ட் போட்டிகள்தான் அரங்கில் போய் ரசிக்க லாயக்கானவை. பொதுவாக கூட்டம் குறைவாக இருக்கும். ஆட்டமும் சற்று மெதுவாகவே நடக்கும். கூச்சல் குழப்பம் இருந்தாலும் அதைத் தவிர்த்து ஆட்டத்தில் ஓரளவுக்கு கவனம் செலுத்தலாம்.

நான் பார்த்தவரையிலே, இந்தியாவிலேயே சென்னை சேப்பாக்கம் ரசிகர்கள்தான் சிறந்த ரசிகர்கள்.

License

Share This Book